"Qualcomm-ன் கோட்டைக்குள் நுழையும் MediaTek..." - 2nm சிப்பால் ஸ்மார்ட்போன் உலகில் மாறும் போட்டி!

Dimensity 9600 Pro என அழைக்கப்படும் இந்த சிப், அதிக செயல்திறன் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு மற்றும் பேட்டரி திறனிலும் கவனம் செலுத்துகிறது.
MediaTek Dimensity 9600 Pro
MediaTek Dimensity 9600 Pro
Published on
Updated on
2 min read

ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய போட்டி தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக பிரீமியம் ஆண்ட்ராய்டு போன்களின் சிப் சந்தையில் வலுவான இடத்தை பிடித்திருக்கும் Qualcomm நிறுவனத்துக்கு, MediaTek தற்போது நேரடியாக சவால் விடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட flagship ஸ்மார்ட்போன் சிப்பை MediaTek வெளியிட்டுள்ளது. Dimensity 9600 Pro என அழைக்கப்படும் இந்த சிப், அதிக செயல்திறன் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு மற்றும் பேட்டரி திறனிலும் கவனம் செலுத்துகிறது.

ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் processor என்பது சாதனத்தின் முக்கியமான கட்டுப்பாட்டு மையம் போன்றது. கேமிங், கேமரா செயல்பாடு, 5G இணைப்பு, AI வசதிகள், செயலிகளின் வேகம் என போனின் பல முக்கிய அம்சங்கள் சிப்பின் திறனைப் பொறுத்தே அமைகின்றன.

அதனால் flagship போன்களுக்கான processor சந்தையில் எந்த நிறுவனத்தின் சிப் முன்னிலையில் இருக்கிறது என்பது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் முக்கியமான முடிவாக உள்ளது.

MediaTek ஏற்கனவே உலகளவில் அதிக அளவில் ஸ்மார்ட்போன் சிப்களை வழங்கும் நிறுவனமாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலக ஸ்மார்ட்போன் chipset சந்தையில் MediaTek சுமார் 33 சதவீத பங்கை பெற்றிருந்ததாக Counterpoint Research தரவுகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே காலகட்டத்தில் Qualcomm-ன் பங்கு சுமார் 22 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டிலும் MediaTek சுமார் 31 சதவீத பங்குடன் முன்னிலையில் இருந்த நிலையில், Qualcomm சுமார் 23 சதவீதத்தில் இருந்தது.

இதுவரை அதிக எண்ணிக்கையிலான போன்களில் பயன்படுத்தப்படும் சிப்கள் என்ற அடிப்படையில் MediaTek முன்னிலையில் இருந்தாலும், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் Qualcomm-ன் Snapdragon சிப்களுக்கு வலுவான வரவேற்பு இருந்து வந்தது.

குறிப்பாக அதிக செயல்திறன் கொண்ட Android flagship சாதனங்களில் Qualcomm நீண்ட காலமாக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது 2nm தொழில்நுட்பத்துடன் MediaTek களமிறங்கியிருப்பது அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

2nm என்றால் என்ன என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். எளிமையாக சொன்னால், processor-ல் பயன்படுத்தப்படும் transistor-களின் அளவு மற்றும் semiconductor manufacturing technology-யில் ஏற்பட்ட முன்னேற்றத்தை குறிக்கும் முக்கியமான அளவுகோல்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக உற்பத்தி தொழில்நுட்பம் முன்னேறும்போது, குறைந்த மின்சாரத்தில் அதிக செயல்திறனை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் ஒரே நேரத்தில் வேகமான செயல்பாடும் சிறந்த power efficiency-யும் கிடைக்கலாம்.

MediaTek வெளியிட்டுள்ள Dimensity 9600 Pro, AI செயல்பாடுகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் விளக்கத்தின்படி, புதிய சிப்பில் native AI architecture பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை agentic AI வசதிகளை ஸ்மார்ட்போன்களில் செயல்படுத்துவதற்கான திறனை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அதாவது, AI என்பது வெறும் புகைப்படத்தை மேம்படுத்துவது அல்லது கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்ற அளவில் இல்லாமல், போனில் பல பணிகளை புத்திசாலித்தனமாக கையாளும் வகையில் வளர்ந்து வருகிறது.

இதற்கு போட்டியாக Qualcomm-ன் தற்போதைய flagship Snapdragon 8 Elite Gen 5 Mobile Platform, 3nm manufacturing process-ஐ பயன்படுத்துகிறது. அதில் நிறுவனத்தின் Oryon CPU, Hexagon NPU மற்றும் AI சார்ந்த பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. Qualcomm தனது சிப்பில் CPU performance, power efficiency, gaming மற்றும் on-device AI ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக முன்னிறுத்துகிறது.

இதனால் அடுத்த கட்ட போட்டி வெறும் “யாருடைய சிப் வேகமானது?” என்ற கேள்வியில் மட்டும் இருக்காது. குறைந்த மின்சாரத்தில் அதிக செயல்திறன், நீண்ட பேட்டரி ஆயுள், AI செயல்பாடுகள், கேமிங், கேமரா திறன் மற்றும் 5G இணைப்பு ஆகிய அனைத்தையும் ஒரே சிப்பில் சிறப்பாக வழங்குவது முக்கியமாகும்.

மேலும், Qualcomm தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் காலகட்டத்தில் chip விலையை இரட்டை இலக்க சதவீதத்தில் உயர்த்தும் திட்டத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதிரிபாகங்களின் விலை உயர்வை முழுமையாக நிறுவனம் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் MediaTek புதிய 2nm சிப்புடன் சந்தைக்கு வருவது, போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாற்று வாய்ப்பை மேலும் வலுப்படுத்தக்கூடும். Qualcomm-ம் 2nm தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. Samsung Foundry உடன் இணைந்து எதிர்கால Snapdragon சிப்களுக்கான 2nm உற்பத்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் MediaTek முதலில் 2nm சிப்பை சந்தைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், Qualcomm-ன் அடுத்த பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொழில்நுட்ப உலகில் அதிகரித்துள்ளது.

இதன் தாக்கம் இறுதியில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் சென்றடையலாம். சிப் தயாரிப்பாளர்களுக்கு இடையே போட்டி அதிகரித்தால், அதிக திறன் கொண்ட AI வசதிகள், வேகமான செயல்பாடு, சிறந்த கேமிங் அனுபவம் மற்றும் பேட்டரி திறன் கொண்ட flagship போன்கள் சந்தையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது MediaTek எடுத்துள்ள 2nm முன்னெடுப்பு, ஒரு புதிய processor அறிமுகம் என்பதை தாண்டி, பிரீமியம் Android சந்தையில் நீண்ட காலமாக நிலவி வந்த போட்டியின் அடுத்த கட்டத்தை தொடங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com