கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் .யார்..? டெல்லிக்கு விரைந்த அமைச்சர்கள்..!
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி நடைபெற்று, பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 138 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெருன்மான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்பது, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரா அல்லது மூத்த தலைவர் சித்தராமையாவா என குழப்பம் நீடிக்கிறது. இந்த முடிவு குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதமைச்சரை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சித்தராமையா டெல்லி சென்றடைந்துள்ள நிலையில், சிவகுமாரும் டெல்லி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வெற்றி பெறுவதே தனது நோக்கமாக இருந்ததாகவும் அதில் வெற்றி பெற்றதாகவும் சிவகுமார் கூறினார். தனது தலைமையில் 135 எம்எல்ஏக்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் அறிவிப்பு தொடர்பான முடிவை கட்சி மேலிடத்திடம் விட்டு விடுவதாகவும் குறிப்பிட்டார்.