ஹிஜாப் விவகாரத்தில் இளம்பெண் மர்ம மரணம்: செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு நடந்தது என்ன..?

ஹிஜாப் விவகாரத்தில் இளம்பெண் மர்ம மரணம்:  செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு நடந்தது என்ன..?

ஈரானில் ஹிஜாப் அணியாததால் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட பெண் குறித்த செய்திகலை வெளியிட்டதற்காக   இரு பெண் பத்திரிகையாளா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குா்து இனத்தைச் சோ்ந்த மாஷா அமினி என்ற பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தாா்.

அரசு விதித்த முறையில் சரியாக  ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி ஈரான் நாட்டைச்சேர்ந்த  மாஷா அமினி என்னும் இளம்பெண் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது, காவலில் இருக்கும்போதே மர்மமான முறையில் உயிரிழந்தார். 

மாஷா அமினியுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட சில பெண்களின் கூற்றுப்படி, காவலர்கள் அவரை பலமாக அடித்து துன்புறுத்தியதால்தான் அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி, இதற்காக பல்வேறு தரப்பில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அரசின் இந்த கடுமையான நடவடிக்கையை எதிர்த்து  பொதுமக்கள் பலர் திரண்டனர். 

பல்வேறு நாடுகளிலிருந்தும் இதற்கு கடும் கண்டனங்களும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவுகளும் பெருகின. பல பெண்கள் தங்களின் ஹிஜாப்களை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த  போராட்டம் நீண்டநாட்கள்  நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து, அந்நாட்டில் மேலும் இதுதொடர்பான கடும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பெண்கள்  சரியாக ஹிஜாப் அணிகிறார்களா என கண்காணிப்பதற்காகவே  தனிப்படை காவலர்களை நியமித்து ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதற்கிடையில் , சில தினங்களுக்கு முன்னர், மாஷா அமினி விவகாரத்தில் போராடியதற்காக பெண் உரிமைப்போராளி நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும், உயிரிழந்த மாஷா அமினிக்கு மனித உரிமைக்கான ஐ.நா பரிசு வழங்கப்பட்டது. 

இன்னிலையில், இது குறித்த செய்தியை வெளியிட்ட பெண் பத்திரிக்கையாளர்  ‘நிலோஃபா் ஹமேதி’ மீதும், மாஷா அமினியின் இறுதிச்சடங்கு தொடா்பான செய்தியை வெளியிட்ட 'எலாகே முகமதி’ ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த டெஹ்ரான் நீதிமன்றம் இருவருக்கும்  ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com