
தமிழ்நாட்டின் அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆனால், பெரும்பாலான கட்சிகள் திருமாவை மட்டும் குறி வைப்பது ஏன்?
திமுக கூட்டணி
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வலுவான அடித்தளத்துடன் தயாராகி வருகிறது. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் 45.4% வாக்கு விழுக்காடு பெற்று 159 இடங்களை வென்ற இந்தக் கூட்டணி, 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிரூபித்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மத்தியில் ஆளும் பாஜகவின் நீட், மூன்று மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு மற்றும் வக்ஃப் சட்டம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து, தனது கூட்டணியை ஒருங்கிணைத்து வருகிறார்.
மறுபுறம், அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. 20.6% வாக்கு விழுக்காடு மட்டுமே பெற்ற அந்தக் கட்சி, தற்போது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. ஏப்ரல் 11, 2025 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தினர். இருப்பினும், முஸ்லிம் மற்றும் சிறுபான்மை வாக்காளர்களின் ஆதரவு குறையலாம் என்ற அச்சமும், அதிமுகவின் உள் கட்சி பிளவுகள் தொடர்ந்து பிரச்சனையாக உள்ளன என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தனி ரூட்டில் விஜய்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 27, 2024 இல் விழுப்புரத்தில் நடந்த தவெகவின் முதல் மாநாட்டில், விஜய், தனது கட்சி தனித்து பெரும்பான்மை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில், தேவைப்பட்டால் கூட்டணி அமைப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறினார். ஆரம்பத்தில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் பரவின. இதில், துணை முதல்வர் பதவி அல்லது இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 90 தொகுதிகள் ஒதுக்கீடு என்று பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டணி உறுதியாகவில்லை. இதற்கிடையே மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், இனி விஜய் விரும்பினாலும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை.
விஜய், இந்தக் கூட்டணியை “கட்டாயத்தால் உருவானது” என்று விமர்சித்து, “திமுகவுடனான உண்மையான போட்டி தவெகவுக்கு மட்டுமே உள்ளது. மக்கள் 2026 இல் தவெகவை ஆதரிப்பார்கள்,” என்று கூறினார். தவெக, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரை மையப்படுத்தி, 16-20% வாக்கு விழுக்காடு தவெக பெறலாம் என்று சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது, திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கத்தில் பிளவை ஏற்படுத்தலாம்!?.
விசிகவை திமுகவிலிருந்து பிரிக்கும் முயற்சிகள்
விசிக, திமுக கூட்டணியின் முக்கிய அங்கமாக, வட தமிழ்நாட்டில் தலித் மக்களிடையே கணிசமான செல்வாக்கு கொண்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, இந்தக் கட்சி தனது வலிமையை நிரூபித்தது. இருப்பினும், தவெக மற்றும் பாஜக, விசிகவை திமுகவிலிருந்து பிரிக்க முயற்சிக்கின்றன.
டிசம்பர் 2024 இல், விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்த அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திருமாவளவனின் பங்கேற்பின்மைக்கு “திமுகவின் கூட்டணி அழுத்தங்கள்” காரணம் என்று கூறி, “அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்க முடியாத நிலையில் திருமாவளவன் இருக்கிறார். 2026 இல் மக்கள் இந்த அழுத்தங்களை முறியடிப்பார்கள்,” என்று மறைமுகமாக திமுகவை விமர்சித்தார். இந்த கருத்து, அப்போதே தவெக விசிகவை திமுகவிலிருந்து பிரிக்க முயல்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதேபோல், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த சமீபத்திய பேட்டியில், "திருமாவளவன் மன அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என்று சகோதரியாக நான் வேண்டிக் கொள்கிறேன். அவர் திமுகவால் தான் மன அழுத்தத்தில் இருக்கிறார் என நான் கருதுகிறேன். திமுக கூட்டணியிலேயே குழப்பம் உள்ளது" என்று தெரிவித்தார். அதேபோல், விசிகவில் இருந்து விலகி விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜுனா, திமுகவுடன் அதிகாரப் பகிர்வு இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
அசைந்து கொடுக்காத திருமா
எனினும், திருமா இதுபோன்ற எந்த சலசலப்புக்கு அசைந்து கொடுக்கவில்லை. நேற்று (ஏப்ரல் 2), திருமாவளவன் தனது கட்சி உறுப்பினர்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றினார். அதில், "எல்லோரும் நாங்கள் திமுகவை மட்டுமே நம்பியிருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், விசிக ஒரு தனித்தன்மை வாய்ந்த கட்சி. தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் நாங்கள் போராடுகிறோம். திமுகவுடனான கூட்டணி, பாஜகவின் இந்துத்துவ அரசியலை தமிழ்நாட்டில் தடுப்பதற்காக உருவானது. இந்தக் கூட்டணி தொடரும், ஆனால் எங்கள் கொள்கைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் தெளிவாகக் கூறினார்.
இந்த உரை, திமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்திய அதே நேரத்தில், விசிகவின் தனித்தன்மையை குறிப்பிடும் வகையில் அமைந்தது. குறிப்பாக, "நாங்கள் திமுகவை மட்டும் நம்பி இருக்கவில்லை" என்ற திருமாவின் ஸ்டேட்மென்ட் திமுகவுக்கும் அவர் கொடுத்த எச்சரிக்கை மணியாகவே பார்க்க நேரிடுகிறது. இதோ பாருங்க.. எல்லாரும் என்னை தான் டார்கெட் பண்றாங்க. ஆனா, நான் இன்னமும் உங்க கூட தான் இருக்கேன். ஆனா, அதுக்காக நான் உங்களை மட்டுமே நம்பியிருக்கேன்னு நினைச்சுக்காதீங்க" திருமா திமுகவுக்கு கொடுத்த ஸ்டேட்மென்ட்டாக தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விசிகவின் தலித் சமூகத்தின் வாக்கு வங்கியை தான் பாஜக, விஜய் உட்பட அனைவருமே டார்கெட் செய்கின்றனர். விஜயின் புத்தக வெளியீட்டு விழா கருத்துகள், தமிழிசையின் பேட்டி, மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்கள் ஆகியவை இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ளது. இந்த இடைவெளியில், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழலாம். தவெகவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, அதிமுக-பாஜக கூட்டணியின் உறுதித்தன்மை, மற்றும் திமுக கூட்டணியின் ஒற்றுமை ஆகியவை தேர்தலின் முடிவை தீர்மானிக்கும். விசிகவை இலக்காகக் கொண்ட அரசியல் நகர்வுகள் தீவிரமாக உள்ளன, ஆனால் திருமாவளவனின் உறுதியான நிலைப்பாடு, இந்த முயற்சிகளுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுத்துள்ளது. இப்போதைக்கு, அரசியல் பரபரப்பு அமைதியாக இருக்கலாம். ஆனால், இந்த இடைவெளியில் எதுவும் நடக்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்