
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தன்னை தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும், திமுக ஆட்சியை அகற்றும் வரை தான் காலணிய மாட்டேன் எனவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி, கோவையில் உள்ள தனது வீட்டில் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். பச்சை வேட்டி அணிந்து மேல் சட்டை அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அண்ணாமலை கயிறால் செய்யப்பட்ட சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். கசியவிடப்பட்டதற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் பெண்கள் மீது கொடுக்கப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
திமுகவை ஆட்சியிலிருந்து இறக்கும் வரை தான் காலணி அணியப்போவதில்லை எனவும் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.