

இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் விஜய். அதில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (Vehicle Registration Certificate - RC) குறித்த அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன.
பொதுவாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும் இந்தச் செயல்முறைகள் மாற்றப்பட்டு, உடனுக்குடன் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC பெறும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் பேசியதாவது, "தற்போது தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் (Registration Certificate) அளிக்கும் சேவைக்கான கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரர்களிடம் வசூலிக்கப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது.
இந்த அட்டை விண்ணப்பதாரருக்கு கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாமே பதிவிறக்கம் செய்யும் வசதி விரைவில் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
இத்துடன் ஓட்டுநர் தேர்வு அதாவது driving test -ல் தேர்ச்சி அடைபவர்களுக்கு உடனேயே டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR கோடை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். ஆவணம் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப் பதிவை புதுப்பிப்பதற்கும் பிற போக்குவரத்துப் சேவைகளுக்கும், தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி எளிதான இணையதள சேவைகள் படிப்படியாக வசதிகள் நடைமுறைப்படுத்தப்படும்." எனப் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.