தமிழக அரசியலில் தொங்கு சட்டசபை பரபரப்பு: 27 ஆண்டுகளுக்கு முன் பிரமோத் மகாஜன் சொன்ன 'அந்த' காமெடி இப்போது நிஜமாகிறதா?

சீனப் பிரதிநிதிகளிடம் இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர் விளக்கிய விதம் அனைவரையும் சிரிக்க வைத்தது....
தொங்கு சட்டசபை
தொங்கு சட்டசபை
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத 'தொங்கு சட்டசபை' சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை. மாறாக, ஒன்றிரண்டு இடங்களை வைத்துள்ள சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக ஈடுபட்டுள்ளது. அதே சமயம் இரண்டாவது பெரிய கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர, மூன்றாவது பெரிய கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஆனால், மிகக்குறைந்த இடங்களை வைத்துள்ள சிறிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளன. இந்த விசித்திரமான சூழல், 1997-ல் பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய ஒரு புகழ்பெற்ற உரையை மீண்டும் இணையத்தில் வைரலாக்கியுள்ளது.

1996 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இதே போன்ற ஒரு சூழல் நிலவியது. அப்போது எச்டி தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய பிரமோத் மகாஜன், இந்திய ஜனநாயகத்தின் முரண்பாடுகளைத் தனதுக்கே உரிய கிண்டல் பாணியில் விவரித்தார். அந்த உரை தற்போது தமிழகத்தின் தற்போதைய இழுபறி நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அன்றைய தேர்தலில் 161 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், மதச்சார்பின்மை என்ற பெயரில் மற்ற கட்சிகள் ஒன்று திரண்டதால் வாஜ்பாய் அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா பிரதமரானார்.

அந்த விவாதத்தின் போது பேசிய பிரமோத் மகாஜன், ஒருமுறை சீனாவுக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். சீனப் பிரதிநிதிகளிடம் இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர் விளக்கிய விதம் அனைவரையும் சிரிக்க வைத்தது. "நான் பிரமோத் மகாஜன், நான் தனிப்பெரும் கட்சியைச் சேர்ந்தவன், ஆனால் நான் எதிர்க்கட்சியில் இருக்கிறேன்" என்று அவர் சொன்னதைக் கேட்டு சீனர்கள் வியந்தனர். தொடர்ந்து பக்கத்தில் இருந்த காங்கிரஸ் உறுப்பினரைக் காட்டி, "இவர் இரண்டாவது பெரிய கட்சியைச் சேர்ந்தவர், இவர் ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு தருகிறார்" என்றார். அடுத்து இடதுசாரி உறுப்பினரைக் காட்டி, "இவர் மூன்றாவது பெரிய கட்சியைச் சேர்ந்தவர், இவர் முன்னணிக்கு உள்ளே இருக்கிறார் ஆனால் ஆட்சிக்கு வெளியே இருக்கிறார்" என்றார்.

இறுதியாக ரமாகாந்த் கலாப் என்ற உறுப்பினரைச் சுட்டிக்காட்டிய மகாஜன், "இவர் தனது கட்சியில் இருக்கும் ஒரே ஒரு உறுப்பினர், ஆனால் இவர் தான் இப்போது அரசாங்கத்தில் மந்திரியாக இருக்கிறார்" என்று சொன்னபோது நாடாளுமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது. தனிப்பெரும் கட்சி எதிர்க்கட்சியில் இருப்பதும், ஒரே ஒரு நபரைக் கொண்ட கட்சி ஆட்சியில் இருப்பதும் இந்திய அரசியலின் விசித்திரமான முரண்பாடு என்று அவர் சாடினார். இந்த நிலைமை தான் இப்போது தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. பெரிய கட்சிகள் ஆட்சி அமைக்கப் போராட, சில இடங்களில் வென்றவர்கள் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளனர்.

அன்றைய உரையில் தேவகவுடாவின் 'தூங்கும்' பழக்கத்தையும் மகாஜன் விட்டுவைக்கவில்லை. "நாடே அரசாங்கத்தின் கதி என்னவாகுமோ என்று கவலையில் இருக்கும்போது, பிரதமர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்" என்று அவர் கலாய்த்தார். மேலும், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னணி இடையிலான உறவை "தேனிலவுக்கு முன்பே விவாகரத்து வரை சென்ற விசித்திரத் திருமணம்" என்று வர்ணித்தார். வெளியே இருந்து ஆதரவு தருவது என்பது, ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும், ஆனால் மேலே ஏறியவுடன் ஏணியை உருவிவிட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் வேலை தான் அது என்றும் அவர் எச்சரித்தார்.

பிரமோத் மகாஜன் அன்று சொன்னது போலவே தேவகவுடா அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு ஐ.கே. குஜ்ரால் பிரதமரானார், அவரும் காங்கிரஸ் ஆதரவை விலக்கியதால் பதவி இழந்தார். இந்த அரசியல் நிலையற்ற தன்மை 2014-ல் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும் மெஜாரிட்டி பெறும் வரை நீடித்தது. தற்போது 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் அதே போன்ற ஒரு முரண்பாடான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த அதே 'அரசியல் சர்க்கஸ்' இன்று தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் மகாஜனின் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com