அப்பாவின் இறுதிசடங்கை வீடியோகாலில் பார்த்த 3 மகள்கள் - எங்கே?

இறுதி சடங்குக்கு முன்னதாக அவர் விரும்பியபடி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் முதியோர் இல்லத்தினர் இறுதி சடங்கை நடத்த மூன்று மகள்களும் வீடியோ காலில் பார்த்துள்ளனர்.
அப்பாவின் இறுதிசடங்ககை வீடியோகாலில் பார்த்த 3 மகள்கள்
அப்பாவின் இறுதிசடங்ககை வீடியோகாலில் பார்த்த 3 மகள்கள்
Published on
Updated on
2 min read

ஹரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்த சிவசரண் ராம் ரத்தன் குப்தா, தனது வாழ்நாள் முழுவதையும் மூன்று மகள்களைப் படிக்கவைத்து, அவர்களை வாழ்க்கையில் உயர்த்துவதற்காக அர்ப்பணித்தவர்.

ஆனால், அவரது இறுதி நேரத்தில் அருகில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர் முதியோர் இல்லத்தில் உயிரிழந்தார். மும்பை, உத்தரப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் அவரது மூன்று மகள்களும், தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ அழைப்பு (Video Call) மூலம் மட்டுமே பார்த்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிவசரண் ராம் ரத்தன் குப்தாவும் அவரது மனைவி மீனாவும் அந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தனர். பின்னர், அவரது மனைவி மீனா காலமானார். அதன் பிறகு, சிவசரண் ராம் ரத்தன் குப்தா அங்கேயே தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிவசரண் ராம் ரத்தன் குப்தா உயிரிழந்தார். இதையடுத்து, முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்தது. மூவரும் நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டதால், முதியோர் இல்ல நிர்வாகத்தினரும் உள்ளூர் மக்களும் இணைந்து அவரது இறுதிச் சடங்குகளை நடத்தினர்.

முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் கூறுகையில், "சிவசரண் ராம் ரத்தன் குப்தாவின் மனைவி மீனா உயிரிழந்த பிறகும், அவர் தனது மகள்களுடன் தினமும் தொலைபேசியில் பேசி வந்தார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்த பிறகு, மகள்களின் தொலைபேசி அழைப்புகள் படிப்படியாகக் குறைந்தன" என்றார்.

மேலும், சிவசரண் ராம் ரத்தன் குப்தா உயிரிழப்பதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மகள்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தது. இருப்பினும், அவரை நேரில் வந்து பார்க்க யாரும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிவசரண் ராம் ரத்தன் குப்தா உயிரிழந்த பிறகும், நேரில் வர முடியாது என்று அவரது மகள்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரது நடு மகளான, நேபாளத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் அனிதா, இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக ரூ.5,100 அனுப்பியுள்ளார்.

இறுதிச் சடங்குக்கு முன்பாக, அவரது விருப்பத்தின்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன. பின்னர், உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் இணைந்து இறுதிச் சடங்குகளை நடத்தினர். அந்த நிகழ்வை அவரது மூன்று மகள்களும் வீடியோ அழைப்பு (Video Call) மூலம் பார்த்தனர்.

துணி விற்பனை செய்து தனது மூன்று மகள்களையும் படிக்கவைத்து உயர்த்தியதை, முதியோர் இல்லத்தில் பெருமையாகப் பகிர்ந்து வந்த சிவசரண் ராம் ரத்தன் குப்தாவின் இந்த இறுதிச் சடங்கு, அங்கிருந்தவர்களையும் உள்ளூர் மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

முதலில், அவரது அஸ்தியை பாதுகாத்து வைக்குமாறு மகள்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சோனிபட்டுக்கு வர இயலாது என்று தெரிவித்த அவர்கள், அஸ்தியைக் கங்கை நதியில் கரைத்துவிடுமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பாவின் இறுதிசடங்ககை வீடியோகாலில் பார்த்த 3 மகள்கள்
Fake vs Real: போலி பனீரை கண்டறிவது எப்படி?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com