அரசு வேலை... ஆடம்பர சொத்துகள்! அதிகாரியின் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

அரசு அதிகாரி ஒருவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Madhya Pradesh forest officer raid
Madhya Pradesh forest officer raid
Published on: 
Updated on: 
2 min read

அரசு அதிகாரி என்றாலே மக்களின் வரிப்பணத்தில் இருந்து கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாகப் புகார் எழுந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு அதிகாரி ஒருவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 2.5 கிலோ தங்கம், 1.6 கிலோ வெள்ளி, ரூ.26 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் எனப் பல பொருட்கள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சோதனை மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருபவர் சஞ்சீவ் குமார் சர்மா. இவர் தனது மனைவி மற்றும் சிலருடன் சேர்ந்து, அரசு பணியின் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமான சொத்துகளைச் சேர்த்துள்ளதாக லோக் ஆயுக்தா அமைப்புக்குப் புகார் சென்றுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கினர். அப்போது சஞ்சீவ் சர்மாவின் பெயரில் இருப்பதாகக் கூறப்படும் சொத்துகள், அவருக்குத் தெரிந்த வருமானத்தைவிட 228 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திடம் சோதனைக்கான அனுமதியையும் பெற்ற அதிகாரிகள், ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.

போபால் பிரிவு லோக் ஆயுக்தா அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், பச்மரியில் உள்ள அவரது அரசு குடியிருப்பு மற்றும் அலுவலகம், சிந்த்வாராவில் உள்ள அவரது தனிப்பட்ட வீடு ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டன. இந்தச் சோதனையில் அதிகாரிகள் எதிர்பார்க்காத அளவுக்கு சொத்துகள் தொடர்பான விவரங்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கீட்டின்படி, ரூ.26 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 2.528 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுதவிர 1.656 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2.94 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி மற்றும் பணம் மட்டுமின்றி நான்கு வாகனங்களும் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளன.

அவற்றில் ஸ்கார்பியோ கார், மஹிந்திரா KUV கார், ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை அடங்கும். இந்த நான்கு வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.31.2 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதோடு விசாரணை முடிந்துவிடவில்லை. சஞ்சீவ் சர்மாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு சொத்துகள் பற்றிய விவரங்களும் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளன. அதில் 'எக்கோடெல் ரிசார்ட்' என்ற பெயரில் உள்ள தங்கும் விடுதியின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என்றும், 'செரினிட்டி தி வில்லா' என்ற பெயரில் உள்ள மற்றொரு சொத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்றும் ஆரம்பகட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலம் வாங்கியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பான 28 ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ரிசார்ட் மற்றும் தங்கும் விடுதியின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நிலம் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்தச் சொத்துகளின் மொத்த மதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கண்டுபிடிக்கப்பட்ட சொத்துகளின் ஆரம்பகட்ட மதிப்பு சுமார் ரூ.7.6 கோடி என லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது. இது சஞ்சீவ் சர்மாவின் தெரிந்த வருமானத்தைவிட சுமார் 560 சதவீதம் அதிகம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இது இறுதியான மதிப்பீடு கிடையாது என்றும், தொடர்ந்து சோதனையும் விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரியின் வருமானம், சொத்துகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே இந்த விவகாரத்தில் முழுமையான விவரங்கள் தெரியவரும். மேலும் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு அரசு அதிகாரியின் சொத்துகள் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.