12 வயதில் விறகு சுமந்த சிறுமி.. இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மீராபாய் சானு - 28 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

2026-ல் மீண்டும் தனது சிறந்த நிலைக்கு திரும்பிய மீராபாய், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
12 வயதில் விறகு சுமந்த சிறுமி.. இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மீராபாய் சானு - 28 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!
Published on
Updated on
3 min read

Asian Games-ல் மட்டும் ஒரு பதக்கம் இல்லை என்ற குறை... இன்று முடிந்தது. காயங்கள், தோல்விகள், நான்காவது இடத்தில் முடிந்த வேதனை என தொடர்ந்து சோதனைகளை சந்தித்த இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 2026 Aichi-Nagoya Asian Games-ல் மகளிர் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது முதல் ஆசிய விளையாட்டு பதக்கமாகும்.

இந்த வெள்ளி Mirabai-க்கு மட்டும் முக்கியமானதல்ல. Asian Games Weightlifting-ல் இந்தியாவுக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பதக்கம் இது. கடைசியாக 1998 Bangkok Asian Games-ல் Karnam Malleswari வெள்ளி வென்றிருந்தார். அதன் பிறகு இந்திய Weightlifting காத்திருந்த அந்த நீண்ட இடைவெளியை இன்று Mirabai முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

12 வயதில் விறகு சுமந்த சிறுமி

மணிப்பூரின் நோங்போக் காக்சிங் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மீராபாய் சானு. ஆறு குழந்தைகளில் இளையவரான அவர், சிறுவயதில் வீட்டுக்குத் தேவையான விறகுகளை அருகிலிருந்த மலைப்பகுதியில் இருந்து எடுத்துவருவது வழக்கம்.

அவருக்கு சுமார் 12 வயது இருந்தபோது, தனது அண்ணனால் தூக்க முடியாமல் இருந்த பெரிய விறகுக் கட்டையை மீராபாய் எளிதாக தூக்கிச் சென்ற சம்பவம் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியது. அப்போது தெரியாமல் இருந்த அந்த உடல் வலிமைதான் பின்னர் அவரை உலகம் அறிந்த பளுதூக்கும் வீராங்கனையாக மாற்றியது.

பயிற்சி மையமும் வீட்டிற்கு அருகில் இல்லை. தினமும் பல கிலோமீட்டர் பயணம் செய்து பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. சில நேரங்களில் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர்கள் அவருக்கு இலவசமாக பயணம் செய்ய உதவியுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு, தன்னை அப்போது உதவிய அந்த ஓட்டுநர்களை அழைத்து நன்றி தெரிவித்ததும் பெரிதாக பேசப்பட்டது.

2016 ரியோ.. வாழ்க்கையை உலுக்கிய தோல்வி:

மீராபாயின் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத வேதனை 2016 ரியோ ஒலிம்பிக்கில் வந்தது. 48 கிலோ பிரிவில் இந்தியாவின் முக்கிய பதக்க நம்பிக்கையாக களமிறங்கிய அவர், Snatch பிரிவில் 82 கிலோ எடையை தூக்கினார். ஆனால் Clean and Jerk பிரிவில் மூன்று முயற்சிகளிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மொத்த எடையையே பதிவு செய்ய முடியாமல் போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை, ஒரு மொத்த எடைகூட பதிவு செய்ய முடியாமல் வெளியேறிய அந்த தோல்வி அவரை மனதளவில் கடுமையாக பாதித்தது.

ஆனால் அதுதான் முடிவு இல்லை.

ஒரே ஆண்டில் உலக சாம்பியன்

ரியோ தோல்விக்கு அடுத்த ஆண்டே மீராபாய் அதிரடியாக திரும்பினார்.

2017 உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று உலக சாம்பியனானார். அதன்பிறகு 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். அவரது வாழ்க்கை மீண்டும் உச்சத்தை நோக்கிச் சென்ற நேரத்தில் இன்னொரு பெரிய சோதனை வந்தது.

2018 ஆசிய விளையாட்டுக்கே செல்ல முடியவில்லை

2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முக்கிய பதக்க நம்பிக்கையாக இருந்தார் மீராபாய். ஆனால் கடுமையான முதுகு காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை. உலக சாம்பியனாக இருந்த நிலையிலும், ஆசிய விளையாட்டு மேடையில் நிற்கக்கூட முடியாமல் போனது.

ஆசிய விளையாட்டு பதக்கம் என்ற கனவு மீண்டும் தள்ளிப்போனது.

டோக்கியோவில் இந்தியாவையே கொண்டாட வைத்தார்

ரியோ தோல்விக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீராபாய் சானு தனது மிகப்பெரிய திரும்பிவருகையை பதிவு செய்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். Snatch பிரிவில் 87 கிலோவும், Clean and Jerk பிரிவில் 115 கிலோவும் தூக்கி இந்தியாவுக்கு அந்த ஒலிம்பிக்கின் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

ரியோவில் மொத்த எடையே பதிவு செய்ய முடியாத அதே வீராங்கனை, டோக்கியோவில் ஒலிம்பிக் மேடையில் வெள்ளிப் பதக்கத்துடன் நின்றார். ஆனால் இன்னும் ஒரு குறை இருந்தது. ஆசிய விளையாட்டு பதக்கம். 2023.. பதக்கம் கண்ணுக்கு முன்னால் இருந்தபோது மீண்டும் காயம் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் அந்த கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் Clean and Jerk பிரிவில் 117 கிலோ எடையை தூக்க முயன்றபோது மீராபாய்க்கு தொடை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மேடையிலேயே கீழே விழுந்த அவர், இறுதியில் நான்காவது இடத்திலேயே முடித்தார். பதக்கம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் மீண்டும் தவறிப்போனது.

பாரிஸ் ஒலிம்பிக்கிலும் ஒரு கிலோ வித்தியாசம்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் மீராபாய் பதக்கத்திற்கு மிக அருகில் சென்றார்.

199 கிலோ மொத்த எடையுடன் போட்டியை முடித்த அவர், வெண்கலப் பதக்கம் வென்ற தாய்லாந்து வீராங்கனையை விட வெறும் ஒரு கிலோ மட்டுமே பின்தங்கினார். மீண்டும் நான்காவது இடம்.

மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம்.

ஆனால் அவர் விடவில்லை. 32 வயதில் முடிக்க வேண்டிய ஒரு வேலை 2026-ல் மீண்டும் தனது சிறந்த நிலைக்கு திரும்பிய மீராபாய், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

  • ஒலிம்பிக் பதக்கம் இருந்தது.

  • உலக சாம்பியன் பட்டம் இருந்தது.

  • காமன்வெல்த் தங்கம் இருந்தது.

  • இல்லாதது ஆசிய விளையாட்டு பதக்கம் மட்டும்.

  • 2014 ஆசிய விளையாட்டில் 9-வது இடம்.

  • 2018-ல் காயம் காரணமாக போட்டியே இல்லை.

  • 2023-ல் காயத்துடன் 4-வது இடம்.

மூன்று முறை தப்பிய அந்த பதக்கத்திற்காகவே 2026-ல் அவர் மீண்டும் களமிறங்கினார்.

இன்று.. 12 ஆண்டு காத்திருப்பு முடிந்தது. தனது 32-வது வயதில் மீண்டும் எழுந்து, விளையாட்டு வாழ்க்கையில் நீண்ட காலமாக காலியாக இருந்த அந்த ஒரு இடத்தையும் இன்று நிரப்பியுள்ளார். இது தங்கப் பதக்கம் அல்ல. ஆனால் இந்த வெள்ளியின் பின்னால் இருக்கும் 12 ஆண்டு போராட்டம்… தங்கத்தைவிட கனமானது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com