பெங்களூரு வெயிலுக்கு பயந்து பக்கத்து ஹோட்டலில் ஏசி ரூம் எடுத்த பெண்.. வைரலாகும் வினோத முடிவு.. நீங்க என்ன சொல்றீங்க?

பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு வினோதமான மற்றும் புத்திசாலித்தனமான வழியைக் கையாண்டுள்ளார்
Bengaluru women who took ac room in near hotel
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. குளிர்ச்சியான காலநிலைக்குப் பெயர் பெற்ற இந்த நகரத்தில், தற்போது நிலவும் கடும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு வினோதமான மற்றும் புத்திசாலித்தனமான வழியைக் கையாண்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் பிரியா பால் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கடும் வெயில் காரணமாகத் தனது வீட்டில் இருக்க முடியாமல், குளிர்ச்சியான சூழலைத் தேடி தனது வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் ஒரு ஹோட்டலில் ஏசி ரூம் புக் செய்து தங்கியுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஹோட்டல் அறைக்குள் ஏசி காற்றை ரசித்தபடி நிம்மதியாக ஓய்வெடுப்பதைக் காணலாம். தனது வீட்டில் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் போனதே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் அதில் விளக்கியுள்ளார்.

தாம் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்பது குறித்து பிரியா விரிவாகக் கூறியுள்ளார். பெங்களூருவில் மழை பெய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்த்ததாகவும், ஆனால் மழை ஏமாற்றியதால் வெப்பம் தாங்க முடியாத நிலைக்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக ஒரு ஏர் கூலர் அல்லது ஏசி வாங்க கடைக்குச் சென்றபோது, எங்குமே ஸ்டாக் இல்லை என்றும், ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வர ஏழு நாட்கள் ஆகும் என்று கடைக்காரர்கள் கைவிரித்துவிட்டதாகவும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

கூலர் அல்லது ஏசியை வாடகைக்கு எடுக்க முயற்சி செய்தபோதும், அதிக தேவை காரணமாக எங்குமே கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல், ஆன்லைனில் கூலர் ஒன்றைப் புக் செய்துவிட்டு, அது வரும் வரை இந்த ஞாயிற்றுக்கிழமையை ஒரு ஹோட்டலில் கழிக்கத் திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார். வெளியில் எங்காவது சுற்றித் திரிந்து அலைச்சலை அதிகமாக்கிக் கொள்ளாமல், ஹோட்டல் அறைக்குள் அமர்ந்து நெட்ஃபிலிக்ஸ் பார்த்துக் கொண்டு ஓய்வெடுத்தது ஒரு நல்ல முடிவாகத் தெரிந்தது என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலானது. இதைப் பார்த்த பலரும் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், "வெயிலைத் தாங்க முடியாமல் ஹோட்டல் ரூம் எடுக்கும் அளவுக்கு அந்தப் பெண்ணிடம் அவ்வளவு பணம் இருக்கிறதே, நமக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காதா?" என்று கமெண்ட் செய்துள்ளனர். மற்றொருவர், "வீட்டில் கரண்ட் கட் ஆகும் நேரங்களில் எனக்கும் இப்படித் தான் தோன்றும்" என்று அந்தப் பெண்ணின் முடிவை ஆதரித்துப் பேசியுள்ளார்.

இருப்பினும் சிலர், "ஒவ்வொரு முறையும் ஹோட்டல் ரூம் எடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்து ஒரு ஏசியையே வாங்கிவிடலாமே" என்று அறிவுரை வழங்கியுள்ளனர். பெங்களூரு போன்ற நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாகவும், இனி ஏசி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருவதையும் இந்தச் சம்பவம் உணர்த்துவதாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, பிரியாவின் இந்த அதிரடி ஐடியா இப்போது பலருக்கு ஒரு மாற்று யோசனையைக் கொடுத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com