பெங்களூருவில் சாலையோரக் காய்கறி வியாபாரி ஒருவர், தனது தலையில் ஏஐ தரவு சேகரிப்பு கருவியை அணிந்து கொண்டு காய்கறிகளை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த வியாபாரி தலையில் ஐபோன் பொருத்தப்பட்ட ஹெட் பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களிடம் காய்கறிகளைப் பேசிக் கொடுத்தபடி இருக்கிறார். இந்த வீடியோவைச் பகிர்ந்தவர்கள், அவர் ஒரு மணி நேரத்திற்கு 350 ரூபாய் சம்பாதிப்பதாகவும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும் கணக்கிட்டுப் பதிவிட்டுள்ளனர். இது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நிறுவனங்கள், நிஜ உலகத் தரவுகளைத் திரட்ட இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துகின்றன. தெருக்களில் மக்கள் நடமாடும்போது வீடியோ, ஆடியோ மற்றும் இடஞ்சார்ந்த தகவல்களைச் சேகரித்து ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வியாபாரி, தனது அன்றாட வேலையைச் செய்துகொண்டே தரவுகளைச் சேகரிக்கும் பணியையும் ஒரு கூடுதல் வருமானத்திற்காக மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை எடுத்த நபர், தான் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, வண்டியை நிறுத்தி வியாபாரியிடம் விசாரித்து இந்தத் தகவலைப் பகிர்ந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ 5.3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர், இது போன்ற நவீன வேலை வாய்ப்புகள் கிக் எகானமியில் (Gig Economy) கூடுதல் வருமானம் ஈட்ட உதவும் என்று பாராட்டி வருகின்றனர். இதனிடையே, மற்றொரு பயனர் ஒருவர், அந்த வியாபாரிக்கு மாதம் 300 மணி நேரம் வேலை கிடைக்காது என்றும், இந்தத் திட்டத்தில் அவருக்கு 10 முதல் 20 மணி நேரம் மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், ஒருவர் வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கும் இது போன்ற வேலைகள் வழங்கப்பட்டதாகவும், ஒரு சில மாதங்கள் மட்டுமே இது நீடித்ததாகவும் பகிர்ந்துள்ளார்.
இதேபோல், இந்த வேலை முறை குறித்துப் பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. ஒரு சிலர் இவருடைய உழைப்பைப் பாராட்டினாலும், பொது இடத்தில் இது போன்ற கேமராக்களைப் பயன்படுத்துவதால் தனிநபர் பாதுகாப்பு மற்றும் ரகசியம் தொடர்பான கேள்விகளையும் சிலர் முன்வைக்கின்றனர். அதுமட்டுமின்றி, பின்னணி இரைச்சலால் இந்தத் தரவுகள் எந்த அளவிற்குத் துல்லியமாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். எது எப்படியிருந்தாலும், ஒரு சாதாரண காய்கறி வியாபாரி நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து வேலை செய்வது, எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி மாறப்போகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.