சமூக வலைதளங்களில் சில நாட்களாகப் பெரும் பேசுபொருளாக மாறியிருந்த 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) எனும் நையாண்டி தளத்தின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தை உருவாக்கிய அபிஜீத் டிப்கே, தனது தனிப்பட்ட எக்ஸ் கணக்கின் வாயிலாக, சிஜேபி கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த நடவடிக்கை குறித்து அவர் பதிவிட்டபோது, தங்களுக்கு இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று குறிப்பிட்டதோடு, கணக்கு முடக்கப்பட்டதைக் காட்டும் திரைப் பிடிப்பையும் பகிர்ந்துள்ளார். சட்டப்பூர்வமான கோரிக்கையை ஏற்று இந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளம் விளக்கம் அளித்துள்ளது.
சிஜேபியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டிருந்தாலும், அதன் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்தச் செய்தி வெளியாகும் வரை இன்ஸ்டாகிராமில் அந்தத் தளத்திற்கு 13.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர். ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்புதான் இணையத்தில் தோன்றிய இந்த நையாண்டி தளம், மிகக் குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 'இளைஞர்களால், இளைஞர்களுக்காக, இளைஞர்களுக்கான ஒரு அரசியல் முன்னணி' என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இந்தத் தளம், 'சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்' என்றும் தாரக மந்திரத்தை முன்வைத்துள்ளது.
இந்தத் தளத்தின் 'நிறுவனர் மற்றும் தலைவர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அபிஜீத் டிப்கே, இது ஒரு நையாண்டி முயற்சி என்று தெளிவாகத் தனது இணையதளத்தின் அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தளத்தில் இணைய விரும்பும் மக்களுக்காக ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக அந்தத் தளம் தெரிவித்துள்ளது. இக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் தடை செய்ய வேண்டும், நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களை அதிகரிக்காமல் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மற்றும் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை நையாண்டி கலந்த மொழியில் பேசி வந்த இந்தத் தளத்திற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்டிருப்பது, இணைய உலகில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நையாண்டி தளங்களுக்குப் பேச்சுரிமை எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், இந்தத் தளம் முன்வைத்த கோரிக்கைகள் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. சட்டப்பூர்வமான கோரிக்கைகள் என்ன என்பது குறித்து இதுவரை அரசு தரப்பிலிருந்து தெளிவான விளக்கங்கள் வெளியாகவில்லை என்றாலும், அரசியல் களத்தில் இது போன்ற நையாண்டி தளங்களின் தாக்கம் அதிகரிப்பதை இந்த முடக்கம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.