

ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட் (Phuket) நகரிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா (AI2379) விமானம், ஒடிசா மாநிலத்தின் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது கடுமையாகக் குலுங்கி, சுமார் 300 அடி செங்குத்தாக கீழிறங்கியது.
இந்தச் சம்பவத்தில், சீட் பெல்ட் அணியாத பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.
ஆரம்பத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இரு விமானிகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
மூச்சுப் பரிசோதனையுடன், போதைப்பொருட்கள் அல்லது மனநல மருந்துகள் (Psychotropic drugs) எடுத்துக்கொண்டுள்ளனரா என்பதைக் கண்டறிய ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
முதற்கட்ட சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களின் மாதிரிகள் உறுதிப்படுத்தும் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சில உணவுகள் மற்றும் மருந்துகள் முதற்கட்ட சோதனையில் தவறான முடிவுகளைக் காட்டக்கூடும் என்பதால், உறுதிப்படுத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், தலைமை விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), விமானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, பயணிகளில் சிலர் விமானி போதையில் இருப்பதுபோல் தோன்றியதாகக் கூறிய குற்றச்சாட்டுகளை இந்தச் சோதனை உறுதிப்படுத்தியுள்ளது.
என்.டி.டி.வி. செய்தித் தளத்துக்கு பேட்டியளித்த பயணி ஒருவர், "நானும் எனது சகோதரரும் தான் விமானத்தில் ஏறிய கடைசிப் பயணிகள். எங்களுடன் விமானிகளும் வந்தனர். நான் அவரிடம், ‘நாம் சரியான நேரத்தில் செல்கிறோமா அல்லது தாமதமாகிறதா?’ எனக் கேட்டபோது, அவர் மிகவும் மெதுவாகப் பதிலளித்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன. நான் எனது சகோதரனிடம், ‘விமானி போதையில் இருப்பது போலத் தெரிகிறது’ என்று கூறினேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்த்தீர்கள்" எனக் கூறியிருந்தார்.
மேலும், சம்பவம் நடந்த பிறகு, காக்பிட் எனப்படும் விமானிகள் அறையிலிருந்து வெளியே வந்த விமானி, இதை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது எனக் கூறியதாகவும் ஒரு பயணி தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் விமானத்தின் தரையில் அமர்ந்ததாகவும், விமானப் பணிக்குழுவினரின் உதவியுடன்தான் மீண்டும் காக்பிட்டுக்குள் செல்ல முடிந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
விமானத்தின் உயரம் சரிந்தபோது, தலைமை விமானி தனது இருக்கையில் இல்லாமல், துணை விமானியின் இருக்கைக்குப் பின்புறம் நின்றுகொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
விமானம் காற்றில் மிதக்கும் திறனை இழந்து கீழே விழும் நிலைக்குச் செல்வதைக் குறிக்கும் ‘ஸ்டால்’ (Stall) எச்சரிக்கைகள் ஒலித்ததாக விமானிகள் அறையான காக்பிட்டின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில், விமானத்தின் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பான (Autopilot) ஆட்டோபைலட் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, துணை விமானி ‘ஸ்டால்’ நிலையில் இருந்து விமானத்தை மீட்பதற்கான தனது முறையான பயிற்சியின்படி செயல்பட்டு, விமானத்தின் முன்பகுதியை (Nose) கீழ்நோக்கிச் செலுத்தியுள்ளார். (விமானத்தின் முன்பகுதியைக் கீழ்நோக்கிச் செலுத்துவதன் மூலம், இழந்த வேகத்தையும் காற்றில் மிதக்கும் திறனையும் மீண்டும் பெற முடியும்.)
துணை விமானியின் இந்தச் செயல்தான் விமானத்தை ‘நெகட்டிவ் ஜி’ (Negative G - புவியீர்ப்பு விசைக்கு எதிரான நிலை) என்ற நிலைக்குத் தள்ளியது. அதாவது, ரோலர் கோஸ்டர் வேகமாகக் கீழே செல்லும்போது நாம் எடையற்றதாக உணர்வது போன்ற நிலை. இதனால், சீட் பெல்ட் அணியாத பயணிகள் மற்றும் அவர்களது பொருட்கள் மேலே தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளன.
இதன்பின்னர், தலைமை விமானி உடனடியாகத் தனது இருக்கைக்குத் திரும்பி, விமானத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டுவந்துள்ளார்.
இன்ஜினின் உந்துவிசையைக் (Throttle) அதிகபட்ச தொடர் உந்துவிசை (Maximum Continuous Thrust) நிலைக்கு மாற்றி, விமானத்தை மீண்டும் உயரத்துக்கு ஏற்றியுள்ளார்.
கஞ்சா போதையில் விமானத்தை இயக்கியதாகக் கூறப்படும் விமானியின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் விமானம் இயக்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், விமானப் போக்குவரத்தை கண்காணிக்க தற்போது உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (DGCA) பதிலாக, தனி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு ஊழியருக்கு முதல் முறையாக போதைப்பொருள் சோதனையில் ‘பாசிட்டிவ்’ (Positive - போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படுதல்) என முடிவு வந்தால், அவர் மறுவாழ்வு சிகிச்சைக்காக (Rehabilitation) சிறப்பு மருத்துவர், மனநல ஆலோசகர் அல்லது போதை மீட்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
அவர் மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பினால், புதிதாக மீண்டும் ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் ‘நெகட்டிவ்’ (Negative - போதைப்பொருள் இல்லை) என்ற முடிவைப் பெற வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருத்துவப் பொறுப்பாளரிடம் இருந்து உடல் தகுதிச் சான்றிதழையும் (Fitness Certificate) பெற்றாக வேண்டும்.
ஆனால், இரண்டாவது முறையாகவும் சோதனையில் சிக்கினால், அவரது பணி உரிமம் (Licence) மூன்று ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக ரத்து (Suspended) செய்யப்படும். இதுவே மூன்றாவது முறையாகவும் தொடர்ந்தால், அந்த நபரின் உரிமம் நிரந்தரமாக ரத்து (Cancelled) செய்யப்படும்.
முன்னதாக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு, சம்பந்தப்பட்ட விமானி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதியானால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், "தற்போதைய சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் (Tweaking of Legislation) செய்ய வேண்டியிருந்தால், அதையும் நாங்கள் தயங்காமல் செய்வோம்" என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்