டெல்லியில் மீண்டும் ‘நிர்பயா’ சம்பவம்! ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மத்திய அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

“இது டெல்லிக்கே பெரும் வெட்கக்கேடு, 2012 நிர்பயா வழக்கை நினைவூட்டும் வகையில்..
30 year old Woman gang-raped in a moving bus
Published on
Updated on
2 min read

டெல்லியில் 30 வயது திருமணமான பெண் ஒருவர் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை டெல்லி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் பிதாம்புரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வந்தவர். மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அவர், வழக்கம் போல் வேலை முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தை அவர் அணுகியதாக கூறப்படுகிறது. பேருந்தின் கதவின் அருகில் நின்றிருந்த ஒருவரிடம் நேரம் கேட்டபோது, அவரை வலுக்கட்டாயமாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பேருந்து நங்லோய் நோக்கி இயக்கப்பட்ட நிலையில், ஓடும் பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற இடங்கள் மற்றும் பேருந்தின் பயண பாதைகள் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், குடும்பத்தின் ஒரே ஆதாரமாக வேலை செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தனது X பதிவில், “டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் நடந்துள்ளது. பெண்கள் பள்ளிகளிலும், பேருந்துகளிலும் கூட பாதுகாப்பாக இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி சவுரப் பரத்வாஜ், “இது டெல்லிக்கே பெரும் வெட்கக்கேடு, 2012 நிர்பயா வழக்கை நினைவூட்டும் வகையில் இந்த கொடூரம் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் 2012-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அப்போது ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை ஏற்படுத்தியது. தற்போது நடைபெற்றுள்ள இந்த புதிய சம்பவமும் பெண்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இவ்வழக்கில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com