மீண்டுமொரு ‘தர்பூசணி மரணம்’.. 15 வயது சிறுவன் பலி - 3 குழந்தைகள் உயிருக்கு போராட்டம்!.. உண்மையில் இது ஆபத்தா?

அங்கு வீட்டில் வெட்டிவைக்கப்பட்டிருந்த தர்பூசணியை ஞாயிற்றுக்கிழமை மாலை சாப்பிட்டதாக
மீண்டுமொரு ‘தர்பூசணி மரணம்’.. 15 வயது சிறுவன் பலி - 3 குழந்தைகள் உயிருக்கு போராட்டம்!.. உண்மையில் இது ஆபத்தா?
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் தர்பூசணி சாப்பிட்ட பின்னர் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குர்கோட் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் போடி தல்ஹா கிராமத்தைச் சேர்ந்த அகிலேஷ் திவார் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஸ்ரீ திவார் (4), பிண்டு திவார் (12) மற்றும் ஹிதேஷ் திவார் (13) ஆவர்.

காவல்துறை மற்றும் மருத்துவத் துறை தகவலின்படி, குழந்தைகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது தாய்மாமன் வீட்டிற்கு வந்திருந்தனர். அங்கு வீட்டில் வெட்டிவைக்கப்பட்டிருந்த தர்பூசணியை ஞாயிற்றுக்கிழமை மாலை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மணி நேரங்களில் அகிலேஷுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்ற குழந்தைகளிடமும் இதே போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக மாவட்ட மருத்துவமனை சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். குஜூர் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அகிலேஷ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று குழந்தைகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்பூசணி காலை நேரத்தில் வெட்டப்பட்டு பல மணி நேரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததால் அதில் மாசு அல்லது கலப்படம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“மேலோட்டமாக பார்க்கும்போது, அசுத்தமான தர்பூசணியை உட்கொண்டதால் உணவு நஞ்சாகி இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்று டாக்டர் குஜூர் கூறினார். வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணியும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் மற்றும் உணவுப் பாதுகாப்பு அறிக்கைகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த மாதம் மும்பை நகரின் பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தர்பூசணி சாப்பிட்ட பின்னர் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில், தடயவியல் ஆய்வில் எலி விஷமாக பயன்படுத்தப்படும் துத்தநாக பாஸ்பைடு இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சத்தீஸ்கர் சம்பவமும் தற்போது தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com