

வளைகுடா நாடுகளில் தொடரும் போர் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு எல்பிஜி சிலிண்டர் வழங்க அர்ஜென்டினா முன்வந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டுத்தாக்குதல் காரணமாக, பல நாடுகள் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரை எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உட்பட வணிக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடைகள் மூடப்படும் நிலையும், சில கடை உரிமையாளர்கள் விறகு அடுப்புக்கொண்டு சமைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் காபி, டீ போன்றவை வழங்கப்படாது என்றும், கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பல இடங்களில் மக்கள் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி, கள்ளச்சந்தைகளில் சிலர் சிலிண்டர்களை விற்க தொடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக, அர்ஜென்டினா கரம் கோர்த்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அர்ஜென்டினாவிலிருந்து வரும் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளதுடன், வெறும் மூன்று மாதங்களில் சுமார் 50,000 டன் எல்பிஜி இந்தியாவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என 'தி எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் அர்ஜென்டினாவின் இயற்கை எரிவாயு மூலமான எல்பிஜி உற்பத்தி 259,000 டன்னாக இருந்தது. 2024ம் ஆண்டுக்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து இந்தியாவிற்கு எல்பிஜி ஏற்றுமதி எதுவும் நடைபெறவில்லை. தற்போது அந்த தென் அமெரிக்க நாடு, இந்தியாவின் எல்பிஜி சந்தையில் தனது பங்கை அதிகரிக்கத் தயாராக உள்ளது. அர்ஜென்டினா தனது 'பஹியா பிளாங்கா' நிறுவனம் பதப்படுத்தும் ஆலையில் 2026-ஆம் ஆண்டில் ஒரு புதிய இயற்கை எரிவாயு திரவப் பிரிப்புப் பிரிவை இயக்கத் திட்டமிட்டுள்ளது . இது பதப்படுத்தப்பட்ட உற்பத்தியை அதிகரிக்கும், மேலும் கூடுதல் அளவுகள் ஏற்றுமதி சந்தைகளை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அர்ஜென்டினாவுடனான இந்தியாவின் உறவு:
இந்தியா-அர்ஜென்டினா இருதரப்பு வர்த்தகம் 2019 முதல் 2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 2022ல் 6.4 பில்லியன் அமெரிக்க டாலராக உச்சத்தை எட்டியது. 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், இந்தியா அர்ஜென்டினாவின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கிறது. இருப்பினும், அர்ஜென்டினாவில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, இந்தியா-அர்ஜென்டினா இருதரப்பு வர்த்தகம் 2023ல் பல சவால்களை எதிர்கொண்டு, 39% சரிவுடன் 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2024ல், புதிய அரசாங்கத்தின் கீழ் இருந்த நிலையான பொருளாதாரம் ஆகியவற்றால், வர்த்தகம் மீண்டும் வேகம் பெற்று, 33% அதிகரித்து 5.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2025-ஆம் ஆண்டில், ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியா-அர்ஜென்டினா வர்த்தகம் மேலும் புத்துயிர் பெற்று, 36.77% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள், OVL லிமிடெட் மற்றும் YPF (அர்ஜென்டின பொதுத்துறை நிறுவனம்) இடையே பிப்ரவரி 2023-ல் கையெழுத்தானது.
தற்போது, உள்நாட்டில் நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, இந்திய அதிகாரிகள் எல்பிஜி போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, காண்ட்லா போன்ற துறைமுகங்கள் எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. போர்சூழல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் உலக பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் தற்போது, புது விநியோகிஸ்தர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்வதில் மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.