

பீகார் மாநிலத்தில் இனி தேர்வில் தோல்வியடையும் மாணவர்களை “Fail – தோல்வி” எனக் குறிப்பிடாமல், “திறன்களுக்குத் தகுதியானவர்” எனக் குறிப்பிடும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு மாணவரின் தகுதி என்பது அவரது தேர்வு முடிவுகளை மட்டுமே வைத்து மதிப்பிடப்படாது என்பதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பீகார் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி நேற்று அறிவித்தார்.
மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், அவர்களின் எதிர்கால நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்தியில் “கௌஷல் கே லியே பாத்ரா” (Kaushal ke liye patra – திறன்களுக்குத் தகுதியானவர்) என்ற சொல் இனி மதிப்பெண் சான்றிதழ்களில் இடம்பெறும்.
இதனுடன், 10-ம் வகுப்புத் துணைத்தேர்வு (Supplementary Exam) எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, தேர்வுக்குச் சிறப்பாகத் தயாராகி வெற்றி பெறுவதற்காக ஒரு மாத காலத்துக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவைப் பாட்னாவில் உள்ள மாணவர்களும் பெற்றோரும் வரவேற்றுள்ளனர்.
“ஃபெயில்” என்ற சொல் மிகப்பெரிய மன உளைச்சலையும், சமூகத்தில் தயக்கத்தையும் ஏற்படுத்தும். இனி அந்த நிலை மாறும் என்றும், இது மாணவர்களின் மன உறுதியைப் பெருமளவில் உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, பீகார் அரசு மேலும் பல புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் நடுப்பகுதியில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, ஆசிரியர் நியமனத் தேர்வை ஒரே கட்டமாக (Single Phase) நடத்துவதாகப் பீகார் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, போராட்டங்கள் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்