``எனது பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன" கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஜாமீன்.. பதைபதைக்கும் பில்கிஸ் பானோ!

"இன்று நான் கடுமையாகப் போராடி வென்ற நீதியையே இழந்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பரிச்சயமான பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன. நான் மீண்டும் பயப்படுகிறேன். எனக்காக, என் குடும்பத்திற்காக, என் பிள்ளைகளுக்காக." - பில்கிஸ் பானோ
"My Fears Are Returning Again": Bilkis Bano Distressed as Supreme Court Grants Bail to Convicts
``எனது பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன" கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஜாமீன்.. பதைபதைக்கும் பில்கிஸ் பானோ!
Published on: 
Updated on: 
2 min read

2022 குஜராத் கலவரங்களின் போது பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அவரது குடும்பத்தினரில் 7 பேரை கொலை செய்த குற்றவாளிகளில் இருவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு தனக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார் பில்கிஸ் பானோ.

பில்கிஸ் பானோ அறிக்கை

இதுகுறித்து அவரது வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா மூலமாக வெளியிட்ட அறிக்கையில், "வலி, அதிர்ச்சி மற்றும் நம்பமுடியாத காட்சிகளால் ஏற்பட்ட புதிய கண்ணீரின் வழியே வார்த்தைகள் மெதுவாக வெளிவந்தாலும், நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

மீண்டும், இரண்டாவது முறையாக, என்னை அழைக்காமலும் என் தரப்பைக் கேட்காமலும் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. பத்திரிகை செய்திகள் மூலமாகவே நான் இதை அறிந்துகொண்டேன்.

நான் வெறும் 19 வயதான ஒரு இளம் பெண்ணாக இருந்தபோது, ​​என் உலகம், என் கைக்குழந்தை மகள், என் குடும்பம், என் வீடு, மனிதகுலத்தின் மீதான என் நம்பிக்கை ஆகிய அனைத்தும் என்னிடமிருந்து கொடூரமாகப் பறிக்கப்பட்டன.

அன்றிலிருந்து கடந்த 24 நீண்ட ஆண்டுகளாக, எனக்காகவும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காகவும் நீதிக்காக மீண்டும் மீண்டும் போராடி வருகிறேன்.

லட்சக்கணக்கான ஆதரவுக் குரல்களும் ஒற்றுமைக்கான குரல்களும் என்னை வந்ததால் மட்டுமே, 24 ஆண்டுகளாக என்னிடம் இருப்பதாக எனக்கே தெரியாத தைரியத்தின் ஊற்றுகளை நான் தேடிக் கண்டறிந்தேன்.

நான் அடுத்தடுத்து நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறேன்; ஒவ்வொரு முறையும் என் தரப்பு நியாயமானது என நிரூபிக்கப்பட்டபோதும், நீதியின் மீதான என் நம்பிக்கை மீட்கப்பட்டபோதும் நான் நன்றியுணர்வுடன் இருந்தேன். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பால், என் வாழ்வின் சிதைவுகளில் இருந்து நான் மீண்டெழுந்தேன். நான் அமைதிக்காக ஏங்கினேன். நான் புன்னகைக்கக் கற்றுக்கொண்டேன்.

ஆனாலும், இன்று நான் கடுமையாகப் போராடி வென்ற நீதியையே இழந்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பரிச்சயமான பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன. நான் மீண்டும் பயப்படுகிறேன். எனக்காக, என் குடும்பத்திற்காக, என் பிள்ளைகளுக்காக.

மேலும், நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் இழந்துவிடுவேனோ என்றும் அஞ்சுகிறேன். எனக்கு இதைச் செய்தவர்களின் தண்டனையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் எப்படி எளிதாக நிறுத்தி வைக்க முடிந்தது? அவர்கள் எப்படி எனக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் இருக்க முடிந்தது?

நீதிமன்றத்தில் என் குரல் கேட்கப்படாததைக்கூட அவர்களால் எப்படி கடந்த செல்ல முடிந்தது?

நான் இந்த உத்தரவை எதிர்த்துப் போராடுவேன். நான் போராடியே ஆக வேண்டும். என் பிள்ளைகளுக்காக இதைச் செய்கிறேன்; அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த அச்சங்களாலும் வடுக்களாலும் பீடிக்கப்பட்டு வாழத் தேவையில்லை என நினைக்கிறேன்... உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காக இதைச் செய்கிறேன்.

ஏனென்றால், எந்தவொரு பெண்ணும், பாதிக்கப்பட்டவரும், குடிமகளும், தங்களுக்குரிய இடம் மற்றும் சமத்துவம் குறித்த இந்த முடிவில்லாத சோதனையைச் சகித்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் தங்கள் நீதிக்காகப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடாது." என எழுதியுள்ளார்.

பில்கிஸ் பானோவுக்கு நடந்தது என்ன?

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, மார்ச் 3-ஆம் தேதி, அகமதாபாத் அருகே உள்ள ராந்திக்பூர் (Randhikpur) கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான பில்கிஸ் பானோ, கலவரத்திற்குப் பயந்து தனது குடும்பத்தினருடன் தப்பிச் சென்றபோது, ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ, அந்தக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்தத் தாக்குதலில் பில்கிஸ் பானோவின் மூன்று வயது மகள் சலேஹா உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 2008 ஜனவரியில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 2017-இல் மும்பை உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது.

நீதிக்கான போராட்டம்!

2022 ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தண்டனைக் குறைப்பு (Remission) கொள்கையின் கீழ் குஜராத் அரசு அந்த 11 குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

குஜராத் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2024 ஜனவரி 8-ஆம் தேதி, குஜராத் அரசின் விடுதலை உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரையும் மீண்டும் சிறையில் சரணடைய உத்தரவிட்டது.

அந்த வழக்கின் குற்றவாளிகளில் இருவருக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளதால், தனது தரப்பைக் கேட்காமல் வழங்கப்பட்ட இந்த உத்தரவு தனக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில்கிஸ் பானோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"My Fears Are Returning Again": Bilkis Bano Distressed as Supreme Court Grants Bail to Convicts
``பீரங்கியின் வாயில் கட்டிவைத்து சுடப்பட்ட மக்கள் கற்பனை அல்ல" ரணபாலி பட சர்ச்சை.. இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் நடிகர் பேச்சு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.