"ஜெயலலிதாவே திமுகவில் இணைந்த மாதிரி இருக்கு".. ஓபிஎஸ் வருகையை சிலாகித்த ஐ.லியோனி

ஜெயலலிதாவே திமுகவில் வந்து இணைந்தது போன்ற ஒரு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
"ஜெயலலிதாவே திமுகவில் இணைந்த மாதிரி இருக்கு".. ஓபிஎஸ் வருகையை சிலாகித்த ஐ.லியோனி
Published on
Updated on
1 min read

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இன்று தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி, ஓபிஎஸ்-இன் இந்த வருகையை ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக வர்ணித்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம் என்பவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நூறு சதவீத நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும், அவர் இன்று திமுகவுடன் கைகோர்த்திருப்பது, மறைந்த ஜெயலலிதாவே திமுகவில் வந்து இணைந்தது போன்ற ஒரு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் போன்ற ஒரு மாபெரும் சக்தி திமுகவிற்கு கிடைத்திருப்பது, அதிமுக என்ற இயக்கமே திமுகவிற்குள் ஐக்கியமானது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சியினரிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகக்கூடிய ஒரு மனிதரான ஓபிஎஸ், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழக அரசியலில் 'நியாயம்' வென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாற்று கட்சியினர், குறிப்பாக ஓபிஎஸ் போன்ற மூத்த தலைவர்கள் திமுகவை நோக்கி வருவதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உயரிய பண்புகளே என்றும் கூறியுள்ளார். தன்னை எதிர்ப்பவர்களையும் நேசிக்கக்கூடிய பண்பு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்களை மதிக்கக்கூடிய மாண்பு ஆகியவைதான் ஸ்டாலினை நோக்கி அனைவரையும் ஈர்க்கிறது. அண்மையில் காலமான முதுபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு முதலமைச்சர் செலுத்திய மரியாதை மற்றும் தன்னை கடுமையாக விமர்சித்த எச். ராஜாவையே மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த பண்புகள் ஆகியவை ஸ்டாலினின் தலைமைத்துவத்திற்குச் சான்றாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவரது இனிமையான அணுகுமுறை காரணமாகவே இன்று ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் திமுகவை நாடி வந்துள்ளதாகவும், ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, இந்த உணர்வுகளையே தாம் பகிர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com