‘முரசு’ புயல் எதிரொலி.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை; 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தீவிரப் புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Chennai Tiruvallur School Holiday
Chennai Tiruvallur School Holiday
Published on: 
Updated on: 
2 min read

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆந்திர மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

வலுவடைந்த ‘முரசு’ புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல், இன்று(நவ 02) தீவிரப் புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாளை அதிகாலை தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘முரசு’ புயல் காரணமாகத் தமிழகத்திலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 5 இடங்களில் மிக கனமழையும், 28 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. புயலின் தாக்கத்தால் இன்றும் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவுக்கு விரைந்த 90 NDRF வீரர்கள்!

இதற்கிடையே, ‘முரசு’ புயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதால், அங்கு பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தயார் நிலையில் உள்ளனர். அதன்படி, அரக்கோணம் அருகே நாகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் 4-வது பட்டாலியன் NDRF பிரிவில் இருந்து 3 மீட்புக் குழுக்கள் ஆந்திர மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றன. தலா 30 வீரர்கள் கொண்ட இந்த 3 குழுக்களிலும் மொத்தம் 90 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4-வது பட்டாலியன் NDRF மூத்த கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின்பேரில், தேவையான மீட்பு உபகரணங்களுடன் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுக்கள் நெல்லூர், பிரகாசம் மற்றும் மார்காபுரம் பகுதிகளுக்குச் சென்று, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல், அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர். ‘முரசு’ புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆந்திர மாநிலத்திலும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.