
கொலைக்குற்றத்திற்காக ஏமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இந்தியாவின் கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகாமை தகவல் வெளியிட்டிருக்கிறது. முன்னதாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மரண தண்டனை, சனாவில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு வேலைக்காக ஏமன் நாட்டிற்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்ற நபருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் வாழத்துவங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்காத காரணத்தால், அதே நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்ற நபருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 -ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார். இருவரும் திரும்பி ஏமன் நாட்டிற்கு சென்றபோது, அவரிடம் இருந்து முழுமையாக கிளினிக்கை பறிக்க முயன்றுள்ளார், அவரின் பாஸ்போர்ட் முதலிய ஆவணங்களை பறித்துக்கொண்டு அவரை துன்புறுத்தியாக தெரிகிறது. இந்நிலையில் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை மீட்டு தப்பிவிட வேண்டும் என்று எண்ணி மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க நிமிஷா திட்டமிட்டுள்ளார். ஆனால் அதிக அளவிலான மயக்க மருந்தால் மஹ்தி உயிரிழந்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் “பிணைத் தொகை” ஏற்க மறுத்ததால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, காந்தபுரத்தின் முயற்சியால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் விடுதலைக்கு மேலும் பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிமிஷாவின் விடுதலைக்காக அவரது தாயார் ஏமனில் சென்று பலகட்ட சட்ட போராட்டத்தினை நடத்தினார். பல தடைகளுக்கு பிறகு மகள் உயிருடன் கிடைக்கப்பெற்றதால் அவரின் குடும்பம் நிம்மதியில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.