E20 Petrol: வெளிநாட்டு சதி? கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, கோரிக்கை, பேரணி - Explained

இந்த E20 கொள்கை அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. டொனால்ட் டிரம்ப் வற்புறுத்துவதால், இந்தியா அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்
https://x.com/ArvindKejriwal
E20 Petrol: வெளிநாட்டு சதி? கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, கோரிக்கை, பேரணி - Explained
Published on
Updated on
2 min read

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு நாடு முழுவதும் E20 பெட்ரோல் பயன்பாட்டை விரிவுபடுத்தியது. 20 விழுக்காடு எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் ஒரு பகுதியாக, எத்தனால் கலப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. ஆனால், இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையிலும் பேரணியைத் தொடங்கினர்.

கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சுமார் 100 ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சி (AAP) அலுவலகத்திலிருந்து பேரணியாகச் சென்றனர். பிரதமர் இல்லத்தை அடையும் முன்னரே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, காவல்துறையினர் மனுக்களை காவல்துறை வாகனம் மூலம் பிரதமர் இல்லத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

E20 பெட்ரோல் விவகாரத்தில் விவாதம் நடத்த அழைப்பு விடுத்தும், பிரதமர் தரப்பில் பதில் இல்லாததால் நேரிலாவது அவருக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த இந்தப் பேரணி அவசியமாகிறது என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, E20 பெட்ரோலுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடங்கிய இணையவழி மனுவில், சில நாட்களிலேயே 2,33,238 பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

E20 petrol India
E20 petrol India

E20 பெட்ரோல் விவகாரம் - கெஜ்ரிவாலின் 3 கோரிக்கைகள்

  • பெட்ரோல் நிலையங்களில் நுகர்வோருக்கு E20 பெட்ரோல் அல்லது சாதாரணப் பெட்ரோல் (Pure Petrol) ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

  • எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலின் விலை, சாதாரணப் பெட்ரோலின் விலையை விடக் குறைவாக இருக்க வேண்டும்.

  • பெட்ரோல் விலையைக் கண்டிப்பாக லிட்டருக்கு ₹84-க்குள் வைக்க வேண்டும்.

இதனுடன், E20 பெட்ரோலால் எந்தப் பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறிவருவதையும் கெஜ்ரிவால் கண்டித்துள்ளார்.

"எந்தப் பாதிப்பும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தால், அந்த ஆய்வை வெளியிடுங்கள்" எனக் கேட்டதுடன், "லட்சக்கணக்கான மக்கள் E20 பெட்ரோலால் என்ஜின் சேதம் மற்றும் மைலேஜ் குறைதல் உள்ளிட்ட புகார்களை எழுப்பியுள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரம்ப்பிடம் மண்டியிட்டார் மோடி? - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி, டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பணிந்து அமெரிக்காவிடம் இருந்து சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.67 லட்சம் கோடி) மதிப்பிலான எத்தனாலை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதன் சுமையை இந்திய நுகர்வோர் மீது சுமத்தும் வகையில் E20 கொள்கையை உருவாக்கியிருப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?

மேலும், இதில் 'மறைமுக வெளிநாட்டு சதி' இருப்பதாகவும் கூறியுள்ளார். இதே கருத்தை பேரணிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார்.

"இந்த E20 கொள்கை அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. டொனால்ட் டிரம்ப் வற்புறுத்துவதால், இந்தியா அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது இந்திய விவசாயிகளுக்குப் பதில் அமெரிக்க விவசாயிகளுக்கே லாபம் தரும்" என அவர் கூறியுள்ளார்.

பேரணியாக வந்தவர்களிடம் மனுக்களைப் பெறாதது சர்வாதிகார நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார். அத்துடன், E20 கொள்கையிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் பெரிய அளவில் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறைகூவல் விடுத்துள்ளார்.

https://x.com/ArvindKejriwal
Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com