சமூக வலைதளங்கள் இன்று அரசியல் கட்சிகளின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான தளங்களாக மாறியுள்ளன. குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் மூலம் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளையும், கட்சியின் செயல்பாடுகளையும் நேரடியாக மக்களிடம் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய பதிவுகள் மற்றும் சமூக வலைதளக் கணக்குகள் கட்டுப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு எதிராக காங்கிரஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
Facebook, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபலமான சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சிக்கும் பதிவுகள் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் அல்லது பெயருடன் தொடர்புடைய பதிவுகள் தானாகவே கட்டுப்படுத்தப்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரிவு நிர்வாகி மனு ஜெயின், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ராகுல் காந்தியின் பெயர் மற்றும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெளியிடும் அரசியல் பதிவுகளை மெட்டா நிறுவனம் தானியங்கி முறையில் கட்டுப்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப்பூர்வமான அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு உதாரணமாக சில வித்தியாசமான சம்பவங்களையும் காங்கிரஸ் தரப்பு முன்வைத்துள்ளது. ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பதிவு, கட்சித் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள், முன்னாள் பிரதமருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி, ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவையும் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அரசியல் விமர்சனங்கள் இல்லாத சாதாரண வாழ்த்து மற்றும் தனிப்பட்ட பதிவுகள்கூட பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது இந்த விவகாரத்தை மேலும் கவனிக்க வைத்துள்ளது.
இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் அந்த அமைப்பின் பொறுப்பாளர் மனீஷ் சர்மா ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் கட்டுப்படுத்தப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 20 முதல் ஹைதராபாத், மும்பை, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மெட்டா அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நிறுவனத்துக்கு ஏழு நாட்கள் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
பிரச்சினை நீதிமன்றத்தை அடைவதற்கு முன்பாக, காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீநேட் மற்றும் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் தரப்பில் தங்களது பதிவுகள் தேர்ந்தெடுத்து நீக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதேசமயம், மெட்டா அதிகாரிகள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே நிறுவனம் செயல்படுவதாக விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
மெட்டா தரப்பின் விளக்கத்தின்படி, இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிய தானியங்கி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் வழங்கும் சட்டப்பூர்வ உத்தரவுகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறும் பதிவுகள் மட்டுமின்றி, குறிப்பிட்ட சூழல்களில் கணக்குகளுக்கும் தற்காலிக அல்லது நிரந்தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் விளக்கமளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு அல்லது அரசின் எழுத்துப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் நீக்கப்பட்ட உள்ளடக்கத்தின் அப்படியே நகலாக இருக்கும் பதிவுகளைக் கண்டறிந்து தடுக்க, பெரிய சமூக வலைதள நிறுவனங்கள் தானியங்கி கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஏற்கெனவே நீக்கப்பட்ட பதிவுகளின் நகல்களை மட்டுமே கண்டறிய வேண்டிய இந்த அமைப்பு, அதைவிட அதிகமான உள்ளடக்கங்களையும் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் தரப்பு வாதிடுகிறது.
இந்தியாவில் உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதை மெட்டாவின் வெளிப்படைத்தன்மை அறிக்கையும் காட்டுகிறது. 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் சுமார் 54 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களுக்கான அணுகலை நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை சுமார் 70 ஆயிரமாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு புதிய தானியங்கி கட்டுப்பாட்டு விதிகளும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.
தற்போது காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகளில், தானியங்கி முறையில் உள்ளடக்கங்களை முடக்கும் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும், ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளை மீண்டும் அனுமதிக்க வேண்டும், எந்த அடிப்படையில் பதிவுகள் முடக்கப்படுகின்றன என்ற விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பன அடங்கும். இந்த வழக்கில் விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.