வானத்தில் 4 மணிநேரம் மரண பயம்: கதறிய பயணிகள்.. நடுங்க வைத்த பிளை91 விமானம்!

மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்துவதையும் அந்த காட்சிகள் உணர்த்துகின்றன...
fly91
fly91
Published on
Updated on
1 min read

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று மதியம் 3 மணி அளவில் பிளை91 நிறுவனத்திற்குச் சொந்தமான ஐசி3401 ரக விமானம் கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி நோக்கிப் புறப்பட்டது. திட்டமிட்டபடி மாலை 4:30 மணிக்கு இந்த விமானம் ஹூப்பள்ளியில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அந்த பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விமானம் நடுவானிலேயே பல மணிநேரம் வட்டமடிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

இந்த இக்கட்டான சூழலில் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பெரும் பீதிக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பெண் பயணி ஒருவர் பயத்தில் கைகளை கூப்பி அழுதுகொண்டே கடவுளை வேண்டுவது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. மேலும் விமானம் குலுங்கியபோது பயணிகள் 'கடவுளே எங்களை காப்பாற்று' என அலறிய சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சில பயணிகள் விமானி எடுக்கும் முடிவுகளால் பயந்து போய் ஆக்ரோஷமாக கத்துவதையும், மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்துவதையும் அந்த காட்சிகள் உணர்த்துகின்றன.

வானத்தில் சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தின் போது, விமானம் முண்டகோட், தாவணகெரே மற்றும் சிவமோகா போன்ற பகுதிகளுக்கு மேலே தொடர்ந்து வட்டமடித்தபடி இருந்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர விமானிகள் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது விமானி பயணிகளிடம் பேசுகையில், தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படியும், பொறுமையாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார். ஆனால் பயத்தில் இருந்த பயணிகள் விமானத்தை பெங்களூரு அல்லது பெல்காம் பகுதிக்குத் திருப்பிவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

தங்கள் உறவினர்கள் நடுவானில் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்ட பயணிகளின் குடும்பத்தினர், பிளை91 விமான நிறுவனம் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். விமானம் எங்கு இருக்கிறது, பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது குறித்த சரியான தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை என்றும், இது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு, இரவு 7:30 மணி அளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பிளை91 நிறுவனம், விமானத்தில் எந்தவிதமான தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஹூப்பள்ளி அருகே நிலவிய மோசமான வானிலை காரணமாகவே பாதுகாப்பு கருதி விமானம் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும், இது வழக்கமான ஒரு பாதுகாப்பு நடைமுறைதான் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பில் தாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்றும், தங்களது விமானிகள் இத்தகைய சூழல்களைக் கையாளும் திறன் கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com