விஜயநகர் மாவட்டம் துவரபுடி கிராமத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாருமதி(8), சரிஸ்மா(6) , மனஸ்வினி (6), உதய் (8) என்ற ஒரே தெருவை சேர்ந்த நான்கு சிறுவர்களும் விளையாடி கொண்டு இருந்திருக்கின்றனர்.
அப்போது அவர்கள் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது காரின் கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்று விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரின் கதவு லாக் ஆனதால் அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் காருக்குள் சிக்கி மூச்சு திணறி இறந்துள்ளனர்.
காலையில் விளையாட சென்ற குழந்தைகள் 11 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் குழந்தைகளை தேடியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
மாலை நான்கு மணியளவில் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் “நாங்கள் எல்லாம் இந்த காருக்கு பக்கத்தில் தான் விளையாடினோம். என்னை சேர்த்துக் கொள்ளாமல் அவர்கள் மட்டும் காருக்குள் விளையாட சென்றனர்.” என கூறியுள்ளார். இதையடுத்து அங்கு நின்றிருந்த காரை கவனித்த பெற்றோர்கள் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் நான்கு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
குழந்தைகளை மீட்ட பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகளை தேடும் போது பெற்றோர்கள் காரை கவனிக்காமல் விட்டிருக்கின்றனர். மேலும் மழை பெய்ததால் காரின் கண்ணாடியில் மழை துளைகள் படிந்திருந்ததால். உள்ளே குழந்தைகள் இருப்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது.
உயிரிழந்த நான்கு குழந்தைகளில் சாருமதி என்ற 8 வயது குழந்தையும், சரிஸ்மா என்ற 6 வயது குழந்தையும் அக்கா தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கதறும் காட்சிகள் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்