இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்! தூக்கம் முதல் இதய ஆரோக்கியம் வரை பாதிக்கும் காலநிலை மாற்றம்

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ‘லான்செட் கவுன்ட்டவுன்’ (Lancet Countdown) அறிக்கை தெரிவித்துள்ளது.
Climate change in India
Climate change in India
Published on: 
Updated on: 
3 min read

கோடை காலம் வந்தாலே வெயில் அதிகரிப்பதும், வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால், தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலை வெறும் அசௌகரியத்துடன் முடிந்துவிடுவதில்லை. மனிதர்களின் உடல்நலம், தூக்கம், வேலைத்திறன், வாழ்வாதாரம் எனப் பலவற்றையும் பாதிக்கிறது. இதுமட்டுமின்றி, கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், காற்று மாசுபாடு மற்றும் நீர் மூலம் பரவும் தொற்றுகளின் அபாயத்தையும் காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதாகப் புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ‘லான்செட் கவுன்ட்டவுன்’ (Lancet Countdown) அறிக்கை தெரிவித்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL), உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான நிறுவனங்களில் பணியாற்றும் 146 ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்புடன் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை 54 முக்கியக் குறியீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். இதன் முடிவுகள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருவது ஆய்வில் கவலைக்குரிய அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்திய மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 10.6 வெப்ப அலை நாட்களை எதிர்கொண்டுள்ளனர். இதில் 5.3 நாட்கள், அதாவது பாதி நாட்கள், காலநிலை மாற்றத்தின் நேரடித் தாக்கத்துடன் தொடர்புடையவை என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல், வெப்ப அலைகளின் தீவிரத்தையும் நிகழும் வாய்ப்பையும் அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

வெப்பத்தின் பாதிப்பு வெயில் நேரத்தில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும் தொடர்கிறது. இரவு வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது உடலின் வெப்பம் இயல்பாகக் குறைவதற்கும், நிம்மதியாகத் தூங்குவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் உடல் சோர்வு, கவனக்குறைவு, எரிச்சல் மற்றும் அடுத்த நாள் வேலைத்திறன் குறைதல் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். 2021 முதல் 2025 வரையிலான காலத்தில், அதிக இரவு வெப்பநிலை காரணமாக இந்தியர்கள் ஆண்டுக்கு சராசரியாக 64 மணி நேரத் தூக்கத்தை இழந்துள்ளதாக அறிக்கை கணித்துள்ளது. 1986 முதல் 2005 வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது இது ஆண்டுக்கு சுமார் மூன்று மணி நேரம் அதிகமாகும்.

அதிக வெப்பம் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் இயல்பான செயல்பாட்டையும் பாதிக்கிறது. நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு நீரிழப்பு, தலைச்சுற்றல், மயக்கம், வெப்பத் தாக்கம் (Heatstroke) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஏற்கெனவே இதய நோய் அல்லது ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அதிக வெப்பம் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

வெப்பத்தின் தாக்கம் உடல்நலத்துடன் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், சாலைப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்றோர் வெயிலில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. அதிக வெப்பம் காரணமாக அவர்களால் வழக்கமான வேகத்தில் வேலை செய்ய முடியாமல் போகிறது. இதனால் வேலை நேரமும் உற்பத்தித்திறனும் குறைகின்றன. 2016 முதல் 2025 வரையிலான காலத்தில், வெப்பத்தின் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 193 பில்லியன் வேலை நேரங்கள் இழக்கப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது. 1990-களின் சராசரியுடன் ஒப்பிடும்போது இது 75 சதவீதம் அதிகம்.

காலநிலை மாற்றம் தொற்றுநோய்களின் பரவலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், நோய்க்கிருமிகள் பரவுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்கலாம். டெங்கு நோயைப் பரப்பும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) கொசுவின் மூலம் நோய் பரவும் சாத்தியம் 1951–1960 காலத்துடன் ஒப்பிடும்போது 2016–2025 காலத்தில் 84 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது. மலேரியாவைப் பரப்பும் கிருமிகளுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் நிலவும் மாதங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்களைக் கண்காணிக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

கடலோரப் பகுதிகளிலும் புதிய சுகாதார அபாயங்கள் உருவாகி வருகின்றன. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் விப்ரியோ (Vibrio) எனப்படும் சில பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. இவை குறிப்பிட்ட சூழல்களில் உணவு மற்றும் நீர் வழியாகத் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தியக் கடற்கரையில் இத்தகைய பாக்டீரியாக்கள் பரவுவதற்கு ஏற்ற சூழல் கொண்ட பகுதிகளின் நீளம் 1982–1991 காலத்துடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. கடல் நீரின் வெப்பநிலையும் உயர்ந்துள்ளது. எனவே, கடலோரப் பகுதிகளில் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பதும் முக்கியமாகிறது.

காற்று மாசுபாடும் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குகிறது. 2023-ம் ஆண்டில் இந்தியாவில் PM2.5 எனப்படும் மிக நுண்ணிய தூசுத் துகள்களின் பாதிப்புடன் தொடர்புடைய உயிரிழப்புகள் 22 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இவற்றில் கணிசமான பங்கு நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உருவாகும் மாசுடன் தொடர்புடையது. காடுகளில் ஏற்படும் தீயினால் உருவாகும் புகையும் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. குறிப்பாக, ஏற்கெனவே சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இத்தகைய மாசு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

இத்தகைய பாதிப்புகளைக் குறைக்க தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அரசின் திட்டங்களும் ஒருசேர அவசியம். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புற வேலைகளைத் தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது போன்றவை உதவும். உடல் அதிகமாகச் சூடாகுதல், குழப்பம், மயக்கம் அல்லது சுயநினைவு குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வெப்பத் தாக்கம் உயிருக்கு ஆபத்தான அவசரநிலையாகும்.

வெப்ப அலை எச்சரிக்கைகளை மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்ப்பது, மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வசதிகளைத் தயாராக வைத்திருப்பது, நகரங்களில் மரங்கள் மற்றும் நிழலான பொது இடங்களை அதிகரிப்பது, தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நீண்டகாலத் தீர்வுகளாக அமையும். காலநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; அது நேரடியாக மனிதர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்புடையது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தை அலட்சியம் செய்யாமல், தனிநபர்கள் முதல் அரசு வரை அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய காலம் இது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.