
நேற்று டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56 வது GST கவுன்சில் கூட்ட தொடரில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் நரேந்திர மோடி கூறியது போலவே GST வரி விதிப்பானது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 5,12,18 மற்றும் 28 சதவீதம் என் 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் வீட்டு உபயோக பொருட்கள். உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீது இருந்த 4 அடுக்கு வரி விதிப்பு, 5 மற்றும் இரண்டு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்பினால் சிறு வணிகர்கள், வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் எளிதாக பயன் பெரும் வகையில் பொருட்களின் விலைகள் குறையும் என்ற நோக்கத்தில் இந்த சீர்திருத்தங்களை GST கவுன்சில் அங்கீகரித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“மாற்றங்களை வரவேற்கிறோம் ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தங்களுடைய தவறை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் 2007 -ல் சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு இதுபோன்ற பல்வேறு வரி விதிகளை விதிக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம், பொருளாதார வல்லுநரும் இது தவறு என்று கூறினார். ஆனால் அன்று அதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்திலும் இது பற்றி பேசி இருக்கிறோம். பல கட்டுரைகள் இதுகுறித்து எழுதி இருக்கிறோம். இது தவறு திருத்திக் கொள்ளுங்கள் என்று கூறினோம். இப்போதாவது அதை உணர்ந்து தவறை திருத்தியதற்கு நன்றி சொல்கிறேன்.
18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்கிறேன் என்று கூறுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் மக்களிடம் 18% வரியை வசூல் செய்துவிட்டு மக்களை கசக்கி பிழிந்து அவர்களது பணத்தை எல்லாம் வரியாக வசூலித்து இப்போதாவது மனம் திருந்தி அறிவு தெளிந்து இன்று வரி விகிதங்களை குறைத்து இருக்கிறார்கள். அதற்காக பாராட்டுகிறேன்” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.