சுவிட்சர்லாந்தின் காஸ்டாட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இந்தியப் பயணிகளுக்காக மட்டும் பிரத்யேகமாக சில விதிமுறைகள் ஒட்டப்பட்டிருந்தது தொடர்பான தகவலைத் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த ஹோட்டலில் காலை உணவின் போது இந்தியப் பயணிகள் உணவை வெளியே எடுத்துச் செல்லக் கூடாது, வழங்கப்பட்ட ஸ்பூன் மற்றும் தட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், வராண்டா மற்றும் பால்கனிகளில் இரைச்சல் ஏற்படுத்தக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. உணவை வெளியே கொண்டு செல்பவர்களுக்கு மதிய உணவுப் பைகள் தனியாக விற்பனை செய்யப்படுவதாகவும் ஹோட்டல் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரத்தைப் பகிர்ந்துகொண்ட ஹர்ஷ் கோயங்கா, விமான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்தியர்கள் செய்யும் சில செயல்கள் தமக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, பொது இடங்களில் கர்பா ஆட்டம் ஆடுவது, விமானங்களுக்குள் பிக்னிக் கொண்டாடுவது, உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்கள் இந்தியர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். டாவோஸ் நகரில் ஒரு இந்தியத் தொழிலதிபர் கிளப் ஒன்றில் பஞ்சாபி பாடல்களை ஒலிக்கச் செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இதனை Soft Power என்று தவறாகப் புரிந்துகொள்வதை அவர் சாடியுள்ளார்.
ஜப்பான் நாட்டு மக்களின் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் உதாரணமாகக் காட்டிய ஹர்ஷ் கோயங்கா, இந்தியா ஒரு உண்மையான உலக வல்லரசாக மாற வேண்டுமானால், நமது Civic Sense-ஐ மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மற்றவர்களுக்கு மதிப்பளிப்பது, கண்ணியமான முறையில் நடந்துகொள்வது போன்றவை ஒரு நாட்டின் உண்மையான அடையாளங்கள். நம்மிடம் உள்ள இத்தகைய பலவீனங்கள் மாறினால் மட்டுமே உலகம் நம்மைப் பெரிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
இந்த விவகாரம் இணையத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் இதனை ஒரு நாட்டின் மீதான பொதுப்படையான விமர்சனமாகப் பார்க்கக் கூடாது என்று வாதிட்டாலும், பெரும்பாலோர் ஹர்ஷ் கோயங்காவின் கருத்தை ஆதரித்துள்ளனர். சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாகவோ அல்லது அரசு அளவிலோ குடிமை உணர்வு குறித்த விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே நாம் இத்தகைய கட்டுப்பாடுகளையும் கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.