

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025ன் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி, NDA கூட்டணி 200 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 96 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையான கட்சியாக மாறியுள்ளது. மேலும் பீகார் அரசியல் களத்தில் MGB கூட்டணி வெறும் 47 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. எனினும், களத்தில் பணம் சார்ந்த வாக்குறுதிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதற்கான ஒரு தெளிவான பாடத்தை இந்த தேர்தல் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகக் குறைவான தொகையைக் கொண்ட ஒரு திட்டத்தைக் கூறி மாபெரும் வெற்றியைச் சுவைக்க உள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மூன்று பெரிய தொகையான ரூபாய் முப்பதாயிரத்தை வாக்குறுதியாக அளித்தபோதும், அது எதிர்பார்த்த வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள "அசுர வலிமை" வெறும் தேர்தல் வியூகம் மட்டுமல்ல, அது திட்டங்களின் நம்பகத்தன்மையையும், அவற்றைச் செயல்படுத்தும் நிர்வாகத் திறமையையும் சார்ந்தது என்பதை இந்த முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் கடந்த ஓராண்டு முழுக்க பீகாரில் நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தது. ஆனாலும், இந்த தேர்தல் முடிவுகள் பாஜக -வுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
பீகாரில் காங்கிரஸ் வெறும் 4இடங்களை மட்டுமே தன் வசம் வைத்துள்ளது ஒரு பிரதான எதிர்கட்சிக்கு இதுமிகப்பெரும் பின்னடைவு ஆகும்.
யாதவ் வாக்குகளை மட்டுமே நம்பிய தேஜஸ்வி!
பீகாரில் யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை முழுவதுமாக பாஜக-ஜேடியூ கூட்டணி அள்ளி இருப்பதுதான் இவர்களின் இந்த வெற்றிக்கு காரணம். பீகாரில், வழக்கமான நிலவரப்படி, யாதவ் சமூதாய மக்களின் பெரும்பகுதி லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கே சென்றிருக்கிறது. பிற சமூகங்களிடையே, அந்தக் கட்சிக்கு 5% வாக்குகள்கூட கிடைப்பதில்லை. அது ஒரு சாதி அடிப்படையிலான கட்சியாகவே பல ஆண்டுகளாக செயல்படுகிறது. ஆனால் இதற்கு எதிர் வாக்குகளை பாஜக ஜேடியூ அள்ளி உள்ளது. தேஜஸ்வி இந்த தேர்தலில் 143 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். ஆனால் இதில் 56 -க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் யாதவ் சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் லல்லு குடும்பத்தினரின் கட்சி, என்றும் சாதிய பாகுபாடுகள் மலிந்த கட்சி என்றும் விமர்சிக்கப்பட்டது.
50% பட்டியலினத்தோர் வாக்குகள்!
இந்த யாதவ் சமூகத்திற்கு எதிரான மொத்த வாக்குகளையும் NDA கூட்டணி அள்ளிச்சென்றுள்ளது. மேலும், இந்துக்கள் என்ற ஒற்றை புள்ளியில் வெற்றியை குவித்துள்ளார் அமித்ஷா. அதற்கு காரணம் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அனைத்து வகுப்பினருக்கும், வாய்ப்பளித்தது ஆகும். குறிப்பாக 50% பட்டியலினத்தோர் NDA கூட்டணிக்கு சென்றுள்ளது. மேலும் பெண்களின் நம்பிக்கை அதிக அளவு NDA மீது சாய்ந்ததற்கு முக்கிய காரணம் மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.1000 உதவித்தொகை.
இம்முறை 71.6% பெண்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அதிக அளவிலான பெண்கள் வாக்குகள் NDA கூட்டணிக்கு கூடுதல் பலத்தை தந்திருக்கிறது. 2005 -ம் ஆண்டு நிதிஷ் முதல்வரானதிலிருந்து, பெண்கள் வாக்கு அம்மாநிலத்தில் அதிக அளவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இடது சாரிகள் இறங்குமுகத்தை சந்தித்து வருகின்றனர் என்பது மற்றொரு சான்றாக இந்த பீகார் தேர்தல் அமைந்துள்ளது. ஒவைசி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
SIR தாக்கமா!?
பீகார் தேர்தலில் மிகப்பெரும் பேசுபொருளாக இருந்த, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலின் மூலம் முஸ்லீம், சிறுபான்மையினர், தலித்துகளிடமிருந்து 65 லட்சம் வாக்குகளை பாஜக திருடியதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்தார் ஆனாலும், அவை ஏதும் எடுபடவில்லை என்பது இந்த தேர்தல் மூலம் புலப்படுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகள் SIR நடவடிக்கை மூலம் வாக்குகள் திருடப்பட்டது, இதனால்தான் பாஜக வென்றுள்ளது, என விமர்சித்து வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.