

இன்றைய இந்தியா உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது. ஆனால், ஒரு காலத்தில் நாட்டின் தேவைக்குப் போதுமான பால் உற்பத்தி செய்ய முடியாமல், வெளிநாடுகளில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. அந்தச் சூழலை மாற்றி, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையிலும் இந்தியாவின் பொருளாதாரத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம்தான் வெண்மைப் புரட்சி. இந்த மாற்றத்தின் பின்னணியில் முக்கியப் பங்காற்றியவர் டாக்டர் வர்கீஸ் குரியன். அவரது பிறந்தநாளான நவம்பர் 26, தேசிய பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்தவர் வர்கீஸ் குரியன். பால் உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டினார். குஜராத்தின் ஆனந்த் பகுதியில் விவசாயிகள் இணைந்து நடத்தி வந்த கூட்டுறவு பால் உற்பத்தி அமைப்பின் வளர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். விவசாயிகள் தனித்தனியாகப் பாலை விற்பனை செய்வதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் பாலைச் சேகரித்து, பதப்படுத்தி, சந்தைப்படுத்தினால் அவர்களுக்குச் சிறந்த வருமானம் கிடைக்கும் என்பதை நடைமுறையில் உருவாக்கிக் காட்டினார்.
1964ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள பால் கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்தார். இதுபோன்ற அமைப்புகளை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதன் தொடர்ச்சியாக 1965ஆம் ஆண்டு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக வர்கீஸ் குரியன் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஆனந்த் கூட்டுறவு முறை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆபரேஷன் ஃப்ளட் திட்டம்தான் இந்தியாவின் பால் உற்பத்தியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பால் உற்பத்தியாளர்களையும் நகர்ப்புறச் சந்தைகளையும் இணைப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கிராமங்களில் சேகரிக்கப்படும் பால் முறையாகப் பதப்படுத்தப்பட்டு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காகப் பால் சேகரிப்பு மையங்கள், குளிரூட்டும் வசதிகள், போக்குவரத்து மற்றும் விற்பனை அமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, விவசாயிகளுக்கு நேரடியாக வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டம் உதவியது.
இந்தத் திட்டம் 1970 முதல் 1996 வரை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் தங்களது பாலை விற்பனை செய்வதற்கான நிலையான சந்தை கிடைத்தது. குறிப்பாகச் சிறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறப் பெண்களுக்கு கால்நடை வளர்ப்பு கூடுதல் வருமானத்திற்கான முக்கிய வழியாக மாறியது.
இந்த மாற்றத்தின் விளைவுகள் இன்றைய புள்ளிவிவரங்களிலும் தெளிவாகத் தெரிகின்றன. 1950-51ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி சுமார் 1.7 கோடி டன்னாக இருந்தது. 2024-25ஆம் ஆண்டில் அது 247.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. 2014-15ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பால் உற்பத்தி சுமார் 69.41 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக உள்ளது. மேலும், சுமார் 8.5 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு பால் உற்பத்தித் துறை வாழ்வாதாரமாக இருக்கிறது. இதில் பெண்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது.
வர்கீஸ் குரியன் உருவாக்கிய கூட்டுறவு இயக்கம் இந்தியாவை உலகின் முன்னணி பால் உற்பத்தி நாடாக மாற்ற உதவியது. ஆனால், இந்த வெற்றி அவருடைய முயற்சியால் மட்டும் உருவானதல்ல; அவருடன் இணைந்து செயல்பட்ட லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள், குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களின் உழைப்பும் இதன் பின்னணியில் உள்ளது. அவரது பிறந்தநாளான நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும் தேசிய பால் தினம், இந்த விவசாயிகளின் பங்களிப்பையும் நினைவுகூரும் நாளாகும். ஒரு காலத்தில் பால் பற்றாக்குறையால் தவித்த இந்தியா இன்று உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்குப் பின்னால் கூட்டுறவு முயற்சியும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பதை வெண்மைப் புரட்சியின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.