"எனக்கு வேற ஆசை இருக்கு".. பகீர் காரணம் சொல்லி பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ் குமார்!

எனது நாடாளுமன்றப் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, நான்கு சபைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை......
nitish kumar
Published on
Updated on
1 min read

கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவர் நிதிஷ் குமார் தனது அதிரடி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பீகார் மாநிலத்தை வழிநடத்தி வந்த அவர், தற்போது முதலமைச்சர் பதவியைத் துறந்து மாநிலங்களவைக்கு செல்ல உள்ளதாகத் தனது 'X' பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது இந்த முடிவிற்குப் பின்னால் ஒரு நீண்ட கால லட்சியம் இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) மற்றும் மாநிலச் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் (சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை) உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது அவரது நீண்ட கால விருப்பமாகும். ஏற்கனவே அவர் மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகும் பட்சத்தில், இந்த நான்கு அவைகளிலும் பணியாற்றிய ஒரு அபூர்வமான அரசியல் மைல்கல்லை அவர் எட்டுவார்.

தனது விலகல் குறித்துப் பேசிய நிதிஷ் குமார், "கடந்த இருபது ஆண்டுகளாக நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையினால், முழு அர்ப்பணிப்புடன் நான் பணியாற்றினேன். உங்கள் ஆதரவால்தான் பீகார் இன்று வளர்ச்சியில் புதிய தரநிலைகளை உருவாக்கி வருகிறது" என்று மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "எனது நாடாளுமன்றப் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, நான்கு சபைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்தது. அதனால்தான் வரவிருக்கும் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்" என்று தனது முடிவிற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும், பீகார் மாநில மக்களுடனான தனது உறவு தொடரும் என்றும், வளர்ந்த பீகாரை உருவாக்கத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும், பீகாரில் அமையவுள்ள புதிய அரசுக்குத் தனது முழு ஆதரவும், வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதிஷ் குமாரின் இந்த இடமாற்றம் பீகார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com