இந்தியா இன்று நிலவுக்குச் விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளது. சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், இந்தப் பெரிய சாதனைகளுக்குப் பின்னால் ஒரு சிறிய ராக்கெட்டின் பயணம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. 1963ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற கடற்கரைப் பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட நைக்-அப்பாச்சி (Nike-Apache) ராக்கெட்தான் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிடம் பெரிய ராக்கெட்டுகளோ, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான நவீன வசதிகளோ கிடையாது. விண்வெளி ஆராய்ச்சியில் ஆரம்பகட்ட முயற்சிகளே நடைபெற்று வந்தன. அப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நைக்-அப்பாச்சி ராக்கெட் இந்தியாவில் முதன்முறையாக ஏவப்பட்டது. இது செயற்கைக்கோளை எடுத்துச் செல்லும் ராக்கெட் அல்ல. பூமியைச் சுற்றி வருவதற்கும் இது உருவாக்கப்படவில்லை. வளிமண்டலத்தின் மேல் பகுதிகளை ஆராய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஆய்வு ராக்கெட் வகையைச் சேர்ந்தது.
இரண்டு நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் திட எரிபொருளில் இயங்கக்கூடியது. அமெரிக்காவில் ஏரோலேப் நிறுவனம் இதனை உருவாக்கியது. பின்னர் அட்லாண்டிக் ரிசர்ச் நிறுவனமும் இதன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டது. நாசா மற்றும் அமெரிக்க விமானப்படையின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட், பின்னாளில் வளிமண்டல ஆய்வுகளுக்கான முக்கியமான கருவியாக மாறியது. 1961 முதல் 1978ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்த வகை ராக்கெட் சுமார் 636 முறை ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பூமியின் மேல் வளிமண்டலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதுதான். காற்றின் வெப்பநிலை, அதன் வேகம், வளிமண்டலத்தின் அமைப்பு, மின்சாரத் தன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரிக்க இதில் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 45 கிலோ எடையுள்ள ஆய்வுக் கருவிகளை எடுத்துச் சென்று, 160 கிலோமீட்டர் உயரம் வரை கொண்டு செல்லும் திறன் இதற்கு இருந்தது.
செயற்கைக்கோள்களும் வானிலை பலூன்களும் இருக்கும்போது, இதுபோன்ற ஆய்வு ராக்கெட்டுகள் எதற்குத் தேவை? வானிலை பலூன்களால் பொதுவாக சுமார் 40 கிலோமீட்டர் உயரம் வரைதான் செல்ல முடியும். அதே நேரத்தில் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி நிலையான சுற்றுப்பாதையில் இயங்குவதற்கு அதைவிட அதிக உயரம் தேவைப்படுகிறது. எனவே, இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட உயரத்தில் உள்ள வளிமண்டலப் பகுதிகளை ஆய்வு செய்வதில் சிக்கல் இருந்தது. குறிப்பாக 50 முதல் 150 கிலோமீட்டர் வரையிலான பகுதிகளை ஆராய்வதற்கு ஆய்வு ராக்கெட்டுகள் மிகவும் உதவியாக இருந்தன.
இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளமாக தும்பா தேர்வு செய்யப்பட்டதற்கும் முக்கியமான அறிவியல் காரணம் இருந்தது. அந்தப் பகுதி பூமியின் காந்தச் சமவெளிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால், பூமியின் மேல் வளிமண்டலம் மற்றும் அயனிமண்டலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அது ஏற்ற இடமாகக் கருதப்பட்டது. இந்த வாய்ப்பைப் புரிந்துகொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியான டாக்டர் விக்ரம் சாராபாய், தும்பாவில் ஆய்வு மையத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் விண்வெளி அறிவியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே விக்ரம் சாராபாயின் நோக்கமாக இருந்தது. இதற்காக 1962ஆம் ஆண்டு இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது. ஆரம்பகட்ட விண்வெளி ஆராய்ச்சிகளை ஒருங்கிணைப்பதும், தேவையான அறிவியல் கட்டமைப்புகளை உருவாக்குவதும் இந்த அமைப்பின் முக்கியப் பணிகளாக இருந்தன. நைக்-அப்பாச்சி ராக்கெட் ஏவப்பட்ட நிகழ்வு, இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கான செயல்பாடுகள் தொடங்கிய முக்கியமான தருணமாக அமைந்தது.
ஆரம்பத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய இந்தியா, படிப்படியாகத் தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கத் தொடங்கியது. 1967ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஏவப்பட்ட RH-75 ராக்கெட், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆய்வு ராக்கெட்டாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டிலேயே ராக்கெட்டுகளை வடிவமைத்து உருவாக்கும் முயற்சியில் இந்தியா முக்கியமான முன்னேற்றத்தைப் பெற்றது. தொடர்ந்து 1969ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு ரோகிணி (Rohini) என்ற பெயரில் உள்நாட்டிலேயே பல்வேறு ஆய்வு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன. வானிலை மற்றும் வளிமண்டல ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த ராக்கெட்டுகள், வெவ்வேறு எடையுள்ள கருவிகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவையாக வளர்ந்தன. சுமார் 2 கிலோ முதல் 200 கிலோ வரையிலான ஆய்வுக் கருவிகளை எடுத்துச் சென்று, 100 முதல் 500 கிலோமீட்டர் உயரம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தத் தொடர் ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
இன்றும் RH-200, RH-300 மார்க்-II, RH-560 மார்க்-II, RH-560 மார்க்-III போன்ற ஆய்வு ராக்கெட்டுகள் தும்பா மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வளிமண்டல ஆய்வுகளுக்கு உதவுவதுடன், இந்தியாவின் பெரிய ராக்கெட் திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அனுபவத்தையும் வளர்க்க உதவுகின்றன.
இன்று இந்தியா நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலத்தை அனுப்பியுள்ளது. ஆனால், இந்தச் சாதனைகள் ஒரே நாளில் உருவானவை அல்ல. ஆரம்பத்தில் சிறிய ஆய்வு ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளை உருவாக்கியது முதல், விஞ்ஞானிகளுக்குப் பயிற்சி அளித்தது, தேவையான கருவிகளை உருவாக்கியது, சொந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை வளர்த்தது எனப் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவுதான் இன்றைய வளர்ச்சி.
1963ஆம் ஆண்டு தும்பாவில் விண்ணில் பறந்த நைக்-அப்பாச்சி ராக்கெட் செயற்கைக்கோளையோ, மனிதர்களையோ சுமந்து செல்லவில்லை. ஆனால், இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கான முதல் முக்கியமான படியாக அது அமைந்தது. இன்று உலகம் வியந்து பார்க்கும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்தைப் புரிந்துகொள்ள, அந்தச் சிறிய ராக்கெட்டின் வரலாற்றையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.