ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! பாதுகாப்பான முதலீடாக டாலரை நாடும் உலக முதலீட்டாளர்கள்.. பின்னணி என்ன?

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருப்பதும் பணவீக்கம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது
USD INR
Published on
Updated on
1 min read

இந்திய சந்தையில் இன்று கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற Intraday வர்த்தகத்தில், ரூபாய் முதன்முறையாக ஒரு டாலருக்கு 96 என்ற முக்கிய உளவியல் எல்லையைத் தாண்டி வீழ்ச்சி கண்டது. இறுதியில், இந்திய ரூபாய் 21 பைசா சரிந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 95.97 என்ற குறைந்தபட்ச மதிப்பில் முடிவடைந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஆகியவை ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 109 டாலரைத் தாண்டி உள்ளதால், இந்தியாவின் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ரூபாய் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளியான விற்பனை தரவுகள் மற்றும் தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்கள் மற்றும் உங்களவிய சந்தையின் தான் தாக்கம் இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக அமெரிக்க டாலரையே தேர்வு செய்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னணி அந்நியச் செலாவணி ஆலோசனைக் நிறுவனமான CR Forex Advisors நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் பபாரி கூறுகையில், “உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் டாலரை பாதுகாப்பான முதலீடாக பார்க்கின்றனர். அதனால் டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்றார்.

இதற்கிடையில், இந்திய பங்குச்சந்தைகளும் அழுத்தத்தில் காணப்பட்டன. ஆரம்பத்தில் உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ், பின்னர் 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 75,237-ல் முடிந்தது. இந்த வாரத்தில் மட்டும் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. ரூபாய் சரிவு இந்திய  சந்தையை பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஈரான் தொடர்பான புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. இதனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருப்பதும் பணவீக்கம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையும் உலக சந்தைகளில் எந்த பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தாததால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறி வருகின்றனர். இதன் தாக்கமாக இந்திய ரூபாய் தொடர்ந்து அழுத்தத்தில் இருப்பதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com