நடுக்கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: காப்பாற்றிய பாகிஸ்தான் கடற்படை - அரபிக்கடலில் நெகிழ்ச்சி சம்பவம்!

நடுக்கடலில் பகையையும் மறந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படை செய்த இந்த உதவி
MV Gautam Rescued by Pakistan Navy
Published on
Updated on
1 min read

அரபிக்கடலில் என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியக் கப்பலை, பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டு உதவி செய்துள்ளனர். ஓமானில் இருந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 'எம்.வி. கௌதம்' (MV Gautam) என்ற அந்த சரக்குக் கப்பலில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கப்பல் நகர முடியாமல் கடலில் தத்தளித்த நிலையில், அங்கிருந்த வீரர்கள் அவசர உதவி கோரி தகவல் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படை விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் (MRCC), இந்த விபத்து குறித்து இஸ்லாமாபாத் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உதவி கோரியது. இதனை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் கடற்படை, தனது 'பிஎம்எஸ்எஸ் காஷ்மீர்' (PMSS Kashmir) என்ற கப்பலை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பியது. அந்தக் கப்பலில் 6 இந்தியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசிய வீரர் என மொத்தம் 7 பேர் இருந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி மற்றும் அவசர காலத் தேவைகளை பாகிஸ்தான் கடற்படையினர் வழங்கினர். மேலும், கப்பலின் நிலைமையைச் சீரமைக்கத் தொழில்நுட்ப உதவிகளையும் அவர்கள் செய்ததாக பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியத் தரப்பிலிருந்து கிடைத்துள்ள தகவலின்படி, மே 3-ஆம் தேதியே கப்பலில் உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்ததால் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்தக் கப்பல் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு உட்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியில் இருந்தது. மும்பை மீட்பு மையம் அளித்த தகவலின் பேரில் பாகிஸ்தான் அதிகாரிகள் உதவ முன்வந்தனர். பின்னர் கடல் காற்றின் வேகத்தால் கப்பல் மெதுவாக நகர்ந்து, மே 4-ஆம் தேதி இரவு துவாரகா கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 262 கடல் மைல் தொலைவில் உள்ள இந்திய எல்லைக்குள் நுழைந்தது.

இந்திய எல்லைக்குள் கப்பல் வந்ததும், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்தியக் கடலோரக் காவல்படையின் 'ராஜரத்தன்' கப்பல் அங்கு விரைந்தது. அவர்கள் ஆய்வு செய்தபோது, பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஏற்கனவே அந்தக் கப்பலில் ஏறி முதலுதவி செய்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், கப்பலின் பிரதான ஜெனரேட்டரை சரிசெய்ய முடியாது என்பதால், கப்பலை இழுத்துச் செல்லத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்யும்படி அதன் உரிமையாளருக்கு இந்தியக் கடலோரக் காவல்படை அறிவுறுத்தியுள்ளது. நடுக்கடலில் பகையையும் மறந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படை செய்த இந்த உதவி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com