

ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அடிப்படையில் மகளிர் தினம் என்பது ஒரு கொண்டாட்டமா அல்லது போராட்டத்தை நினைவு கூறும் நாளா? என்று கேட்டால்,
இந்த நாள் ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள் என்பதுதான் உண்மை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8-ம் தேதியை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த நாள் அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. நூற்றாண்டுகளைக் கடந்த போராட்டம், உயிர் தியாகங்களின் மீதுதான் இந்த சர்வதேச மகளிர் தினம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து, தொள்ளாயிரமாவது ஆண்டுகளில் ஆண்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் வேலைக்கான கூலி வழங்கப்பட்டு வந்த நிலையில், பெண்களுக்கு குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் கூடுதல் நேர வேலையும், அதே நேரம், குறைவான ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் பெண்களுக்கு வாக்குரிமை என்பதும் இல்லாத நிலையே இருந்து வந்தது. இதனால் அடிமைத் தனத்தில் இருந்து எழவேண்டும் என்ற முனைப்புடன், பெண்கள் ஒன்றிணையத் தொடங்கினர்.
இப்படி ஒருங்கிணைந்த பெண்கள், 1908-ம் ஆண்டு நியூயார்க் நகரில், ஒன்று திரண்டு, குறிப்பிட்ட வேலை நேரம், தகுதியான ஊதியம் மற்றும் வாக்குரிமை ஆகியவற்றை வலியுறுத்தி, 15 ஆயிரம் பெண்கள், நியூயார்க் நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்றனர். இதுவே இந்த மகளிர் தினத்திற்கான விதையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்கள் பேரணியாக சென்றவுடன் அனைத்து சாத்தியமாகிவிடவில்லை. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. அதனைத் தொடர்ந்து இவர்களின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பின்னர் ஒரு வருடம் கழித்து, உழைக்கும் பெண்களின் இந்த போராட்டத்தை, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி, முதல் தேசிய மகளிர் தினம் என்று அறிவித்தது. 1910-ம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில். உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, கம்யூனிஸ்ட் ஆர்வலரும், பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் "கிளாரா ஜெட்கின்" , "தேசிய மகளிர் தினத்தை" சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். அவரின் இந்த யோசனையை அந்த மாநாட்டில் பங்கேற்ற 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்களும், ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர், முதன்முதலில் 1911-ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், ஆரம்ப காலத்தில் சர்வதேச மகளிர் தினத்திற்கு நிலையான தேதி என்று எதுவும் இல்லாதிருந்தது. 1917-ல் ரஷ்ய பெண்கள் "உணவும் அமைதியும்" என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ரஷ்யாவின் அரசாங்கத்தையே மாற்றியது. இரண்டாம் ஜார் நிக்கோலஸ் பதவி விலகலுக்கும், ரோமானோவ் வம்ச ஆட்சியின் முடிவிற்கும் இந்த புரட்சிப் போராட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின்னர் அமைக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. இந்த நாள், கிரிகோரியன் நாட்காட்டியில் மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. இந்த நாளே, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல பெண்களுக்கும் 8 மணி நேர வேலை, தகுந்த ஊதியம் என்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
இப்படி நூற்றாண்டைக் கடந்த போராட்டத்தின் விளைவுதான் இன்று நாம் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம். பெண்கள் படிக்கவும், வாக்களிக்கவும், 8 மணிநேர வேலை, சமஊதியம் பெறுவதும், பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதும் இந்த போராட்டங்களின் விளைவுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று, சர்வதேச மகளிர் தினம் என்பது, சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் இந்த மகளிர் தினத்தை ஒரு கருப்பொருளின் அடைப்படையில் கொண்டா ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி, 2026- ம் ஆண்டுக்கான கருப்பொருள், "Give To Gain" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. "Rights, Justice, Action For All Women and Girls" என அறிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இதன் மூலம், "உரிமைகள், நீதி, நடவடிக்கை அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கானது" என்பதன் மூலம், பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துதல் மற்றும் தாராள மனப்பான்மையின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துதல் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. மகளிர் தினத்தை அந்த நாளின் அர்த்தம் புரிந்தும், அதன் விளைவுகளை உணர்ந்தும் கொண்டாடுவோம்.மாற்றத்திற்கான, உறுதியான உள்ளத்தோடு, சாதனைகளுடன் சரித்திரம் படைப்போம்.சத்தமின்றி சாதனைகளையும் , சரித்திரங்களையும் படைத்து வரும் பெண்களை, இந்த நாளில் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது மாலை முரசு தொலைக்காட்சி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.