

மும்பையில் வசிக்கும் தம்பதி ஒருவர், தங்களின் மாத வருமானம் 2.2 லட்சம் ரூபாய் இருந்தும், தங்களால் போதிய அளவு பணத்தைச் சேமிக்க முடியவில்லை என்று கூறி இணையத்தில் பகிர்ந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மும்பை வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நகரம்' என்ற தலைப்பில் ரெடிட் (Reddit) தளத்தில் பதிவிட்டுள்ள அந்தத் தம்பதி, தாங்கள் ஒரு 1BHK வீட்டில் வசித்து வருவதாகவும், தங்களின் பட்ஜெட்டை எப்படிச் சரியாகக் கையாள்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மாத இறுதியில் கையில் பணம் இல்லாமல் திண்டாடுவதாகவும், மற்றவர்கள் எப்படிச் சிக்கனமாக வாழ்கிறார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்தத் தம்பதி தங்களின் மாதச் செலவுகளை விரிவாகப் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, அவர்களின் வருமானத்தில் மிகப்பெரிய பகுதி வீட்டு வாடகைக்கு 44,000 ரூபாய் செலவாகிறது. மளிகைப் பொருட்களுக்கு 20,000 ரூபாய், வீட்டு வேலை செய்பவருக்கு 8,000 ரூபாய், பயணம் மற்றும் மின்சாரக் கட்டணத்திற்கு தலா 5,000 முதல் 6,000 ரூபாய் வரை செலவாகிறது. இதனுடன் சேர்த்து, தாங்கள் மாதம் 60,000 ரூபாயைச் சேமிப்புத் திட்டமான 'எஸ்ஐபி' (SIP)-இல் முதலீடு செய்வதாகவும், அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்காக மாதம் 12,000 முதல் 13,000 ரூபாய் வரை செலவழிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவு செலவு செய்த பிறகும், தங்களின் கைக்குத் தெரியாமல் மீதிப் பணம் கரைந்து போவதே அவர்களின் கவலையாக உள்ளது.
இதற்குப் பிறகு தங்களின் கையில் சுமார் 60,000 ரூபாய் வரை மீதம் இருக்க வேண்டும், ஆனால் மாத இறுதியில் கையில் பணம் இருப்பதில்லை என்று தம்பதி வருத்தப்படுகின்றனர். ஆடைகள், வாட்ச், பெர்ஃப்யூம் போன்ற சிறு சிறு செலவுகள் ஒருபுறம் இருந்தாலும், சொந்த ஊருக்குச் செல்லும்போது ஒரு பயணத்திற்கு 45,000 ரூபாய் வரை செலவாவதாக அவர்கள் கூறுகின்றனர். பயணச் செலவு மட்டுமின்றி, பெற்றோருக்கான செலவுகளும் சேர்ந்து தங்களின் நிதி நிலையை மோசமாக்குவதாகத் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, இப்போதைய செலவு முறை நீடித்தால் அது தங்களுக்குப் பெரிய சுமையாக மாறும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
இந்தத் தம்பதியின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலானதும், பல நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எஸ்ஐபி-இல் முதலீடு செய்வது என்பது ஏற்கனவே ஒருவித சேமிப்புதான் என்பதை அந்தத் தம்பதி புரிந்துகொள்ளவில்லை என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அன்றாடத் தேவைகளுக்கே பணம் இல்லாமல் கஷ்டப்படும்போது, முதலீடுகளைச் சற்று குறைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று நெட்டிசன்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். சிலர், ஆடம்பரமான கடிகாரங்கள் மற்றும் பெர்ஃப்யூம்கள் வாங்குவதையும், கட்டாயமில்லாத அலுவலக விருந்து நிகழ்ச்சிகளில் அதிக பணம் செலவழிப்பதையும் நிறுத்தினால் மட்டுமே சேமிக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இது ஒரு செலவுப் பிரச்சனைதான் என்றும், அலுவலக பார்ட்டிகளுக்கு 12,000 ரூபாய் செலவழிப்பது தேவையற்றது என்றும் பல பயனர்கள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர். அதிக விலையுள்ள பானங்கள் மற்றும் உணவு ஆர்டர் செய்வதைத் தவிர்த்துவிட்டு, பட்ஜெட்டுக்கு ஏற்ப வாழ்ந்தால் 10,000 ரூபாய் வரை எளிதாகச் சேமிக்க முடியும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தம்பதி பகிர்ந்த இந்தப் பதிவு உண்மையானதா அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்படுகிறதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், நகர்ப்புற ஏழைகள் (Urban Poor) என்ற பதத்தை அவர்களுக்குச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நிதித் திட்டமிடலில் தவறு செய்யும் தம்பதிக்கு, சமூக ஊடகங்கள் தற்போது பாடங்களை எடுத்து வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.