IVF-ல் நடக்கும் ஒரு சிறு தவறு... "குழந்தைகள் யாருடையது?" தமிழ்நாட்டிற்கு 'எச்சரிக்கை சமிக்கை' கொடுக்கும் சம்பவங்கள்!

நம்பிக்கையுடன் தொடங்கிய ஒரு குடும்பத்தின் பயணம், தற்போது நீதிக்கான போராட்டமாக மாறியிருக்கிறது.
Fertility Clinic Standards
Fertility Clinic StandardsFertility Clinic Standards
Published on
Updated on
3 min read

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கருத்தரிப்பு சிகிச்சை துறையைச் சுற்றி மீண்டும் ஒரு முறை தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன. குருகிராமில் வெளிவந்துள்ள ஒரு IVF சிகிச்சை தொடர்பான சர்ச்சை, மருத்துவ பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது. IVF சிகிச்சை மேற்கொண்ட தம்பதியர், IVF முறையின் மூலம் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் தந்தையின் உயிரியல் தொடர்புடையவர்கள் அல்ல என்று குற்றம்சாட்டியுள்ளனர். நம்பிக்கையுடன் தொடங்கிய ஒரு குடும்பத்தின் பயணம், தற்போது நீதிக்கான போராட்டமாக மாறியிருக்கிறது.

இது ஒரு குடும்பம் அல்லது ஒரு கருத்தரிப்பு மையம் பற்றிய விவகாரம் மட்டுமல்ல. இந்தியாவில் IVF சிகிச்சை நடைமுறைகள் எவ்வளவு பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் உள்ளன, என்ற பெரிய கேள்வியையும் இது முன்வைக்கிறது. தம்பதியர் தங்களின் முட்டைகள், விந்தணுக்கள் மற்றும் கருவுறுதலுக்கான கருக்களை மருத்துவ மையங்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்கள் செய்யும் சிறிய தவறு கூட ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குருகிராம் சம்பவம்: செய்தி அறிக்கைகளின்படி, குருகிராமைச் சேர்ந்த தம்பதியர் IVF முறையின் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆனால் பின்னர் குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையிலான உயிரியல் தொடர்பு குறித்து அவர்களுக்கு சந்தேகங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சை செயல்முறையின் போது கரு அல்லது விந்தணு மாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறி அவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

IVF என்பது சாதாரண மருத்துவ சிகிச்சை போன்றது அல்ல. இது மரபணு அடையாளம், பெற்றோர் உறவு, குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் உணர்ச்சி ரீதியான பல அம்சங்களோடு தொடர்புடையது. குழந்தைகளை பெற்றோர் அன்புடன் வளர்த்தாலும், உயிரியல் அடையாளம் தொடர்பான பதிலளிக்கப்படாத கேள்விகள் அவர்களுக்கு ஆழமான மன அழுத்தத்தை உருவாக்கக்கூடும். இத்தகைய சம்பவங்களில் "மருத்துவ அலட்சியம் நடந்ததா?" என்பது மட்டுமே கேள்வியாக இருக்காது. அறிவியல் முறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டிய ஒரு அமைப்பில், இப்படியான தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் முக்கியமான கேள்வியாக பார்க்கப்படுகிறது.

IVF சிகிச்சையில் துல்லியம் அவசியம்: IVF ஆய்வகங்களில் விந்தணுக்கள், முட்டைகள் மற்றும் கருக்கள் மிகுந்த துல்லியத்துடன் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு மாதிரியும் சரியாக அடையாளமிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். சேகரிப்பு தொடங்கி கருவுறுதல், சேமிப்பு மற்றும் கரு மாற்றம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல நிலை பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

அடையாளமிடல், பதிவுகளை பராமரித்தல் அல்லது கரு மாற்றத்தில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட திருத்த முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பிறந்த பிறகு, இது மருத்துவமனையின் எல்லையை தாண்டி குடும்பம், சட்டம், பாதுகாப்பு உரிமை, அடையாளம் மற்றும் உணர்ச்சி உறவுகள் போன்ற பரந்த பிரச்சினைகளாக இது உருமாறும். அதனால் IVF பாதுகாப்பு என்பது நம்பிக்கையை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது. அதற்கு கடுமையான ஒழுங்குமுறைகள், டிஜிட்டல் கண்காணிப்பு, தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் வலுவான பொறுப்புக்கூறல் போன்றவற்றை கொண்டிருக்கவேண்டும்.

புளோரிடா சம்பவம் எழுப்பிய சட்ட சிக்கல்: குருகிராம் விவகாரம் தனித்த சம்பவம் அல்ல. இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு IVF சிகிச்சை பெற்ற தம்பதியர், அவர்களுக்கு பிறந்த குழந்தை தங்களின் உயிரியல் தொடர்புடையது அல்ல என்பதை பின்னர் அறிந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தை தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு தம்பதியருடன் உயிரியல் தொடர்புடையதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதன் மூலம் ஒரு முக்கியமான சட்ட சிக்கல் எழுந்தது. குழந்தையை வளர்க்கும் உரிமை யாருக்கு? குழந்தையை சுமந்து பெற்றெடுத்த தம்பதியருக்கா? அல்லது தவறுதலாக கரு மாற்றப்பட்டதாக கூறப்படும் உயிரியல் பெற்றோருக்கா? என்பது போன்று எழுந்தன. அறிக்கைகளின்படி, பின்னர் இரு குடும்பங்களும் குழந்தையின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கருத்தரிப்பு மையத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் IVF துறையின் அசுரர் வளர்ச்சி: கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் கருத்தரிப்பு சிகிச்சை துறை வேகமாக விரிவடைந்துள்ளது. முன்பு பெரிய மாநகரங்களில் மட்டுமே இருந்த IVF மையங்கள் தற்போது சிறிய நகரங்களிலும் கூட செயல்பட்டு வருகின்றன. கருத்தரிக்க முடியாமை, தாமதமான பெற்றோராகும் நிலை மற்றும் மருத்துவ சிக்கல்களால் பாதிக்கப்படும் தம்பதியருக்கு இந்த மையங்கள் நம்பிக்கையை வழங்கி வருகின்றன.

ART கிளினிக்குகள் மற்றும் வங்கிகளை ஒழுங்குபடுத்தவும், தவறான பயன்பாடுகளை தடுக்கவும், பாதுகாப்பான சிகிச்சையை உறுதி செய்யவும் Assisted Reproductive Technology Regulation Act அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய ART மற்றும் வாடகைத் தாய் மையங்களுக்கான பதிவேடுகளும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குருகிராம் சம்பவம், பதிவு செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை காட்டுகிறது. அன்றாட கண்காணிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

தமிழ்நாடு ஏன் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்?: இந்த விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தேசிய ART மற்றும் Surrogacy பதிவேடு தொடர்பான அறிக்கைகளின்படி, இந்தியாவில் அதிகளவிலான பதிவு செய்யப்பட்ட IVF மையங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்கள் IVF மற்றும் உதவிப் பெற்ற கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான முக்கிய மையங்களாக வளர்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தம்பதியர் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட மன மற்றும் மருத்துவ சிக்கல்களுக்கு பிறகு தங்களுக்கென்ற ஒரு அழகிய குடும்பம் அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இம்மையங்களை அணுகுகின்றனர்.

அதனால் அதிக எண்ணிக்கையிலான கருத்தரிப்பு மையங்கள் இருக்கும் மாநிலங்களில் கண்காணிப்பு பொறுப்பும் அதிகமாகிறது. குருகிராம் சம்பவத்தை தொலைதூரத்தில் நடந்த நிகழ்வாக தமிழ்நாடு பார்க்க கூடாது. இது ஒரு எச்சரிக்கை சிக்னலாக கருதப்பட வேண்டும்.

மனித வாழ்க்கையை கையாளும் துறை: ஒவ்வொரு IVF சிகிச்சைக்கும் பின்னாலும் பல ஆண்டுகளாக நம்பிக்கை, ஏமாற்றம், சமூக அழுத்தம் மற்றும் உணர்ச்சி போராட்டங்களை சுமந்து வரும் குடும்பங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதனால் IVF துறையில் ஏற்படும் அலட்சியம் என்பது ஒரு தொழில்நுட்ப பிழை மட்டுமல்ல. அது குடும்பங்களின் மன அமைதியை பாதிக்கக்கூடும். குழந்தைகளின் அடையாளத்தைப் பற்றிய நீண்டகால கேள்விகளையும் குடும்பங்களில் உருவாக்கக்கூடும்.

குருகிராம் மற்றும் புளோரிடா சம்பவங்கள் ஒரு உண்மையை தெளிவாக காட்டுகின்றன. கருத்தரிப்பு சிகிச்சையில் ஏற்படும் தவறுகளின் விளைவுகள் மருத்துவமனை பதிவுகளில் மட்டுமே முடிவதில்லை. அவை குடும்பங்கள், குழந்தைகள், அடையாளம் மற்றும் பெற்றோர் உறவின் அர்த்தத்தையே பதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்தியாவின் IVF துறை வளர வேண்டும். ஆனால் அந்த வளர்ச்சி, கடுமையான கண்காணிப்பு, சட்ட தெளிவு மற்றும் மனிதநேய உணர்வுகளுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டியவை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com