"இன்று ஜந்தர் மந்தர்.. நாளை ஜனநாயகம்" - மத்திய அரசை காட்டமாக எதிர்க்கும் சிஜேபி! இனி போராட்டத்திற்கு இந்த 3 இடங்கள்தான்

நாளை, அவர் ஜனநாயகத்தையே பிரகடனமற்றதாக்கிவிடுவார். சர்வாதிகாரியின் பிரச்சனை ஒருபோதும் போராட்டத் தளமாக இருந்ததில்லை.
Jantar Mantar protest
Jantar Mantar protest
Published on: 
Updated on: 
2 min read

ஜந்தர் மந்தர் பகுதி, போராட்டத் தளம் என்ற அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்டு, டெல்லியில் ஆர்ப்பாட்டங்களுக்காக மூன்று மாற்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் வெளியிட்ட அறிவிப்பில், குடிமக்கள் தங்களது போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாற்று இடங்களை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், தற்போது நியமிக்கப்பட்ட இடத்திற்குப் பதிலாக, குடிமக்கள் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான மாற்று பொருத்தமான இடங்களை ஆராய ஒரு குழுவை அமைத்திருந்தது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்ட இடமாக இருந்ததற்கான அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

டெல்லி காவல்துறை அந்தப் பகுதியை போராட்டம் நடைபெறுவதற்கான பிரத்யேகத் தளம் என்ற அறிவிப்பிலிருந்து தற்போது நீக்கியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே சிஜேபி சார்பில், நாடுதழுவிய மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதாவது, நீட் வினாத்தாள் கசிவினை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

இதற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மிகப்பெரிய போராட்டம் ஒன்று டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி சார்பில் நடைபெற்றது.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அவர் பதவி விலகினார். இதனையடுத்து, தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்கு திருட்டு செய்துவிட்டார் என்று கூறியும், தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக வெளியான செய்தியை தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து சிஜேபி சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இந்த போராட்டமானது டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் மெட்ரோ, ரயில்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டதோடு, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் சௌரவ் தாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டனர். தற்போது, ஜந்தர் மந்தரை போராட்டங்களுக்கான பிரத்யேக இடமாக அறிவித்திருந்த நிலையிலிருந்து நீக்கும் உத்தரவை டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் பிறப்பித்துள்ளார். மேலும், குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும், ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று புதிய இடங்கள், போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன," என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பல போராட்டங்கள் நடந்துள்ளது. முக்கியமாக 2017 மார்ச் மாதம், நாட்டையே உலுக்கிய தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் அறிவிப்பிற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் தனது X தளபக்கத்தில், "ஏற்றுக்கொள்ள முடியாதது.

நரேந்திர மோடி ஏன் ஜந்தர் மந்தருக்குப் பயப்படுகிறார்? ஜந்தர் மந்தர் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. உள்துறை அமைச்சகம் இந்திய மக்களிடம் கலந்தாலோசித்ததா? சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டதா? ஏதேனும் அமைப்புகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டதா? இதை எழுத்துப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் மக்களின் ஜந்தர் மந்தரை எப்படி நீக்குகிறார்களோ, அதேபோல் பிரதமர் விரைவில் இந்தியாவில் ஜனநாயகத்தையே அறிவிக்கையிலிருந்து நீக்கிவிடுவார். இந்த நடவடிக்கை அதை நோக்கிய ஒரு படியாகும். இந்தத் தன்னிச்சையான முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது மக்களின் போராட்டம் மற்றும் அமைதியான முறையில் கூடுவதற்கான அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாகும். இப்போது நாடு முழுவதும் ஜந்தர் மந்தராக மாறி வருகிறது!" என்று தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிஜேபி நிறுவனரான அபிஜித் தீப்கே, "ஜந்தர் மந்தரை ஒரு குறிப்பிட்ட போராட்டத் தளம் என்ற நிலையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். ஆம், அது இனி ஒரு போராட்டத் தளம் அல்ல; ஏனெனில், அந்தக் கோழை சர்வாதிகாரியால் அது எப்படியும் ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டுவிட்டது. இன்று, ஜந்தர் மந்தரை அறிவிக்கப்பட்ட போராட்டத் தளமாக இருந்த நிலையிலிருந்து மோடி அதை நீக்கினார்.

நாளை, அவர் ஜனநாயகத்தையே பிரகடனமற்றதாக்கிவிடுவார். சர்வாதிகாரியின் பிரச்சனை ஒருபோதும் போராட்டத் தளமாக இருந்ததில்லை. மக்கள் போராடுகிறார்கள் என்ற எண்ணமே அவருக்குப் பிரச்சனையாக இருந்தது." என்று தனது X தளத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com