ஒரு காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த காஷ்மீர்! இப்போது உருவாகியுள்ள வரலாற்று மாற்றம்!

1989ஆம் ஆண்டு காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதற்குப் பிறகு இதுபோன்ற நிலை உருவாவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
Kashmir local terrorists
Kashmir local terrorists
Published on: 
Updated on: 
2 min read

காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி முகமது லத்தீப் பட் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளத்தாக்குப் பகுதியில் செயல்பட்டு வந்த உள்ளூர் பயங்கரவாதிகள் யாரும் தற்போது இல்லை என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1989ஆம் ஆண்டு காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதற்குப் பிறகு இதுபோன்ற நிலை உருவாவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஜங்க்லிபோரா பகுதியில் நவம்பர் 18ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 22 வயதான முகமது லத்தீப் பட் கொல்லப்பட்டார். இதற்கு முந்தைய நாளில்தான் அவருடன் தொடர்பில் இருந்த உமர் நிசார் தார் என்பவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லத்தீப் பட் பள்ளத்தாக்குப் பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி உள்ளூர் பயங்கரவாதியாகக் கருதப்பட்டார். அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணையும் நிலையைத் தடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

கடந்த காலங்களிலும் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, 2013ஆம் ஆண்டு பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 80-க்கும் கீழ் சென்றது. அவர்களில் உள்ளூர் நபர்களின் எண்ணிக்கை 35-க்கும் குறைவாக இருந்தது. தெற்கு காஷ்மீர் பகுதிகளிலும் அப்போது பயங்கரவாத நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்திருந்தன. ஆனால், அதற்குப் பிறகு நிலைமை மீண்டும் மாறியது. புதிய இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்ததால் அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தன.

இந்த அனுபவம் காரணமாகவே தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாதுகாப்புப் படையினர் முழுமையான வெற்றியாகக் கருதவில்லை. பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், மீண்டும் புதிய ஆட்கள் அமைப்புகளில் சேரும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, லத்தீப் பட் சமீபகாலமாக உள்ளூர் இளைஞர்களைத் தனது அமைப்பில் சேர்க்க முயற்சி செய்து வந்ததாகவும், உமர் தாரை அதில் இணைத்திருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது மரணம் உடனடியாக புதிய ஆட்கள் சேர்க்கப்படுவதைத் தடுக்க உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.

காஷ்மீரில் தற்போது சுமார் 30 லஷ்கர் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளைத் தங்களது மறைவிடமாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் நபர்களின் உதவி கிடைக்கும்போதுதான் வெளிநாடுகளில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பெரிய தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவது எளிதாக இருக்கும். உள்ளூர் ஆதரவு குறைந்தால் அவர்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம் என்பது பாதுகாப்புப் படைகளின் கணிப்பாக உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தான் தற்போது பாதுகாப்புப் படைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளனர். குறிப்பாக, பிர் பஞ்சால் மலைத்தொடரின் இருபுறங்களிலும், ஜம்முவின் பிற பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடைபெற்ற பல முக்கியத் தாக்குதல்களில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லத்தீப் பட் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் கடைசியாக நடத்திய வீடியோ அழைப்பு குறித்த காட்சிகள் வெளியானதும் காவல்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சரணடைய போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகக் காட்டுவதற்காக அந்தக் காணொளி பரப்பப்பட்டிருக்கலாம். ஆனால், அது இளைஞர்களிடையே தவறான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். ஜம்மு பகுதியில் நிலைமை வேறுபட்டுள்ளது. அங்கு கிஷ்த்வார் பகுதியைச் சேர்ந்த முகமது அமீன் என்ற ஜஹாங்கீர் சரூரி உள்ளிட்ட குறைந்தது மூன்று உள்ளூர் பயங்கரவாதிகள் இன்னும் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளூர் பயங்கரவாதிகள் இல்லாத நிலை உருவாகியிருப்பது முக்கியமான முன்னேற்றமாக இருந்தாலும், பயங்கரவாதம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று கூற முடியாது. மீண்டும் உள்ளூர் இளைஞர்கள் இந்த அமைப்புகளில் சேராமல் தடுப்பதும், வெளிநாட்டுப் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் பாதுகாப்புப் படைகளின் அடுத்தகட்ட முக்கியப் பணிகளாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.