

தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் மின் தடையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசை விமர்சிக்கும் வகையில் ஆன்லைனில் மீம்கள், ரீல்கள் ஆகியவற்றை வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ, மாநிலத்தைக் கடந்து தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. கேரள முதலமைச்சரும் அது குறித்துப் மேடையில் பேசியுள்ளார்.
அனிருத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'ஜெயிலர் 2'-வில் இடம்பெற்ற 'அலா பொலேலோ' பாடலுக்கு வி.டி. சதீசன் நடனமாடுவது போல் உருவாக்கப்பட்ட வீடியோதான் அது.
இரவில் மின்சாரம் இல்லாமல் போவதால் தூங்க முடிவதில்லை எனக் குற்றம் சாட்டும் மக்கள், முதலமைச்சர் கேரள மின்சாரத் துறை ஊழியர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பதுதான் மின் தடைக்குக் காரணம் எனக் கேலியாக விமர்சிக்கும் வகையில் இந்த வீடியோவைப் பரப்பி வருகின்றனர்.
இசை, சினிமா மற்றும் சட்டம் (Music, Cinema and Law: Exploring the Intersections of Art, Culture and Law) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில், ஏஐ கொண்டுவரப்போகும் சவால்கள் குறித்து பேசிய சதீசன், இந்த வீடியோ குறித்து மனம் திறந்தார்.
"நான் நடனமாடுவது போன்ற வீடியோ பரவி வருவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது ஒரு குழு நடன வீடியோ. சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன். அதில் நடிகர் மோகன்லால், என்னுடைய நண்பர் முதலமைச்சர் விஜய்யைவிடவும் சிறப்பாக நான் நடனமாடுகிறேன். அவர்களைவிட நன்றாகவே ஆடுகிறேன்."
"நீங்களும் அதைப் பாருங்கள். பார்த்திருப்பீர்கள். செயற்கை நுண்ணறிவு மூலம் அதனை உருவாக்கியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அடிப்படைப் பாடத்திட்டத்திலும் இதனை மாற்ற வேண்டும். காப்புரிமைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பாடங்கள் மாற்றப்பட வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பாடங்களை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.
கேரள முதலமைச்சர் இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இதன் ஆபத்துகளை எதிர்கொள்வது குறித்து சிந்தித்தாலும், இந்த வீடியோவின் தத்ரூபமான அசைவுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒருவர் செய்யாத செயலை, அச்சு அசலாக அவரது புகைப்படத்தை மட்டும் வைத்து மீண்டும் உருவாக்க முடிவது, "Deepfake" குற்றங்களை எளிதாக்கும் என்ற கவலையை பலரும் எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.