‘Sugar-Free’ என்ற பெயர்... ஆனால் 21 கிராம் சர்க்கரை? Starbucks மீது வெடித்த வழக்கு!

இந்த வழக்கின் மையப்புள்ளி, “சர்க்கரை சேர்க்கப்படவில்லை” என்பதற்கும் “சர்க்கரை இல்லவே இல்லை” என்பதற்கும் உள்ள வித்தியாசமாக மாறியுள்ளது.
‘Sugar-Free’ என்ற பெயர்... ஆனால் 21 கிராம் சர்க்கரை? Starbucks மீது வெடித்த வழக்கு!
Published on: 
Updated on: 
2 min read

சர்க்கரை இல்லாத drinks என்று நினைத்து வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், பிரபல காபி நிறுவனமான Starbucks மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்யும் சில புரதச் சத்து பானங்களுக்கு “Sugar-Free” என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அவற்றில் கணிசமான அளவு சர்க்கரை இருப்பதாக நுகர்வோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பானங்களில் பெரிய அளவு ஒரு கோப்பையில் 21 கிராம் வரை சர்க்கரை இருப்பதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அக்டோபர் 2ஆம் தேதி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று நுகர்வோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, Starbucks நிறுவனத்தின் எட்டு புரதச் சத்து பானங்களின் பெயர் மற்றும் விளம்பர முறையை கேள்விக்குள்ளாக்குகிறது. “Sugar-Free” என்று பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையில் அந்த பானங்களில் 13 முதல் 21 கிராம் வரை சர்க்கரை இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது. பானத்தில் சர்க்கரை இருக்கும்போது அதை “Sugar-Free” என்று எப்படி அழைக்க முடியும்? இந்த விவகாரத்தின் பின்னணியில் பாலில் இயற்கையாகவே இருக்கும் லாக்டோஸ் என்ற சர்க்கரை உள்ளது. Starbucks பயன்படுத்தும் புரதம் சேர்க்கப்பட்ட பாலில் இந்த இயற்கை சர்க்கரை இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. அதாவது, தயாரிப்பில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்பதுதான் நிறுவனத்தின் விளக்கம்.

ஆனால் பானத்தின் மொத்த சர்க்கரை அளவு குறித்து நுகர்வோர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பானங்களில் வெண்ணிலா மற்றும் கேரமல் சுவை கொண்ட புரத லாட்டே, மேட்சா பானங்கள் மற்றும் அவற்றின் குளிர்பான வகைகள் அடங்குகின்றன. இவை அனைத்தும் 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புரதச் சத்து பான வரிசையைச் சேர்ந்தவை. உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த சந்தையை நோக்கி இந்த வகை பானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்கை தொடர்ந்தவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம், “சர்க்கரை இல்லாதது” என்ற பெயர் ஒரு சாதாரண வார்த்தை அல்ல என்பதுதான். உடல்நலத்தை கவனிக்கும் ஒருவர், சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர் அல்லது இரத்தச் சர்க்கரை தொடர்பான காரணங்களால் சர்க்கரையை தவிர்ப்பவர், “Sugar-Free” என்ற பெயரை பார்த்து அந்த பானத்தை தேர்வு செய்யலாம். ஆனால் அதே பானத்தில் 13 முதல் 21 கிராம் சர்க்கரை இருப்பது நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் விதிகளை இந்த வழக்கு முக்கியமாக முன்வைக்கிறது. அமெரிக்க விதிகளின்படி, “Sugar-Free” என்ற குறிப்பை பயன்படுத்த ஒரு தயாரிப்பில் குறிப்பிட்ட அளவை விட அதிக சர்க்கரை இருக்கக்கூடாது. வழக்கில் அந்த வரம்பு ஒரு பரிமாறுதலுக்கு 0.5 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் Starbucks பானங்களில் இருப்பதாக கூறப்படும் 13 முதல் 21 கிராம் அளவு இதைவிட பல மடங்கு அதிகம் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

இதில் இன்னொரு விவகாரத்தையும் நுகர்வோர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. “Sugar-Free” என்று பெயர் இருப்பதால், அந்த பானம் குறைந்த கலோரி கொண்டதாகவும் மக்கள் நினைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்த புரத பானங்களின் பெரிய அளவு ஒரு கோப்பையில் சுமார் 270 முதல் 340 கலோரிகள் வரை இருக்கலாம். எனவே சர்க்கரை குறித்த தகவலுடன் கலோரி தொடர்பான எச்சரிக்கையும் தெளிவாக இருக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு Starbucks தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களது புரத பானங்கள், சர்க்கரை சேர்க்கப்படாத தேர்வுகள் மற்றும் ஊட்டச்சத்து விவரங்கள் குறித்து இணையதளம், செயலி, மெனு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெளிவாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் மையப்புள்ளி, “சர்க்கரை சேர்க்கப்படவில்லை” என்பதற்கும் “சர்க்கரை இல்லவே இல்லை” என்பதற்கும் உள்ள வித்தியாசமாக மாறியுள்ளது. பால் போன்ற இயற்கை மூலப்பொருட்களில் இருக்கும் சர்க்கரையும் ஒரு பானத்தின் மொத்த சர்க்கரை அளவில் சேரும். எனவே, ஒரு பொருளை வாங்கும்போது அதன் பெயரை மட்டும் பார்த்து முடிவு செய்வதை விட, ஊட்டச்சத்து அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மொத்த சர்க்கரை அளவையும் கவனிப்பது அவசியம்.

தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், Starbucks நிறுவனம் உண்மையில் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நீதிமன்ற விசாரணையின் முடிவில்தான் இந்த குற்றச்சாட்டுகளின் சட்டபூர்வ நிலை தெளிவாகும். ஆனால் “Sugar-Free” என்ற பெயருடன் விற்கப்படும் ஒரு பானத்தில் 21 கிராம் வரை சர்க்கரை இருப்பதாக கூறப்படும் விவகாரம், உணவு மற்றும் பானப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பெயர்கள் மற்றும் விளம்பரங்கள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com