“உங்க கஷ்டத்த நாங்க புரிஞ்சிக்கிட்டோம்” சூப்பர் அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே..! மகிழ்ச்சியில் லோகோ பைலட்டுகள்

லோகோ பைலட்டுகளின் பணிச் சுமையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல்...
loco pilot cabin in old trains
loco pilot cabin in old trains
Published on
Updated on
2 min read

சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முதுகெலும்பாகத் திகழும் லோகோ பைலட்டுகளின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு நவீன வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில் இன்ஜின்களில் 90 சதவீத இன்ஜின்கள் குளிர்சாதன வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பெருமையுடன் தெரிவித்துள்ளது.

ரயில் இன்ஜினை இயக்கும் ஓட்டுநர்கள், அதாவது லோகோ பைலட்டுகள், பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு இவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள ரயில்வே நிர்வாகம், கடந்த பத்து ஆண்டுகளில் இவர்களது பணிச்சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வு அறைகள்:

பணியை முடித்தவுடன் லோகோ பைலட்டுகள் நல்ல ஓய்வெடுக்கும் வகையில், முக்கியமான ரயில் நிலையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய தொழிலாளர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த ஓய்வு அறைகள் தற்போது முழுமையாக குளிர்சாதன வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நீண்ட நேர பணிக்குப் பின்னர் வரும் லோகோ பைலட்டுகள் புத்துணர்ச்சியுடன் ஓய்வெடுக்க முடியும்.

சௌகரியமான இருக்கைகள்:

லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் உடல் சோர்வை குறைக்கும் வகையில், இந்திய அளவில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்களில் வசதியான, பணிச்சூழலியலுக்கு ஏற்ற இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் களைப்பை குறைத்து, கவனத்தை சிதறாமல் இயக்க உதவுகின்றன.

புதிய இன்ஜின்களில் கழிப்பறை வசதி:

காலத்தின் தேவை கருதி, புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ரயில் இன்ஜின்களிலும் கழிப்பறை வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது லோகோ பைலட்டுகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பழைய இன்ஜின்களிலும் மாற்றம்:

புதிய இன்ஜின்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், பழைய ரயில் இன்ஜின்களின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அனைத்து லோகோ பைலட்டுகளும் அடிப்படை வசதிகளைப் பெற முடியும்.

குறைக்கப்படும் பணி நேரம்:

லோகோ பைலட்டுகளின் பணி நேரத்தை கணிசமாக குறைக்கும் நோக்கில், அதிக நெரிசல் மிகுந்த ரயில் நிலையங்களில் புதிய ஓய்வு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓய்வெடுத்து மீண்டும் பணியில் ஈடுபட முடியும்.

பாதுகாப்பை உறுதி செய்யும் நவீன கருவிகள்:

லோகோ பைலட்டுகளின் பாதுகாப்பையும், ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு நவீன கருவிகள் இன்ஜின்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. பனிக்காலத்தில் பாதுகாப்பாக இயங்குவதற்கான பாதுகாப்பு உபகரணங்கள், ரயில் விபத்துகளை தவிர்க்கும் அதிநவீன ‘கவாச்’ சாதனம், லோகோ பைலட்டுகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் தொழில்நுட்ப கருவிகள், மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயிலை நிறுத்தும் ‘பிரேக்’ சிஸ்டம் போன்றவையும் இன்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளன.

எளிதான பணிச்சூழல்:

லோகோ பைலட்டுகள் எவ்வித சிரமமும் இன்றி பணியாற்ற ஏதுவாக இன்ஜின்களின் நவீன வசதிகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் போதுமான ஓய்வு நேரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சரக்கு ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் சரக்கு நிலையங்களில் சிறிது நேரம் நிறுத்தப்படும்போது, லோகோ பைலட்டுகள் கழிப்பறை வசதியைப் பயன்படுத்தவும், உணவு அருந்தவும் இது வழிவகை செய்கிறது. குறுகிய தூரம் இயக்கப்படும் புறநகர் ரயில்களின் லோகோ பைலட்டுகள் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். பயணிகள் ரயில்களின் லோகோ பைலட்டுகள் பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் நேரத்தைப் பயன்படுத்தி அங்குள்ள வசதிகளைப் பெறுகின்றனர்.

தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்:

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், “லோகோ பைலட்டுகள் இந்திய ரயில்வே குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள். அவர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து ஓடும் அறைகளும் குளிர்சாதன வசதியுடன் மேம்படுத்தப்பட்டு, அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

2014க்கு முன்பு ஒரு ஓடும் அறை கூட குளிர்சாதன வசதியுடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கும் மேற்பட்ட லோகோ கேபின்கள் பணிச்சூழலியலுக்கு ஏற்ற இருக்கைகள், ஏர் கண்டிஷனிங் மற்றும் பிற மேம்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2014க்கு முன்பு ஒரு லோகோ கேபினில் கூட ஏசி வசதி இல்லை. தற்போது தயாரிக்கப்படும் அனைத்து புதிய இன்ஜின்களிலும் கழிப்பறைகள் பொருத்தப்படுகின்றன. பழைய இன்ஜின்களும் கழிப்பறைகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அதிக நெரிசல் உள்ள பாதைகளில் புதிய ஓய்வு அறைகள் சேர்க்கப்படுவதால் லோகோ பைலட்டுகளின் பணி நேரம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

மூடுபனி பாதுகாப்பு சாதனங்கள், கவாச், ஓட்டுநர் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் போன்ற புதிய பாதுகாப்பு அம்சங்கள் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக்குகின்றன. உள் கட்டமைப்பு வசதிகள், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் போதுமான ஓய்வு நேரங்கள் லோகோ பைலட்டுகளின் பணிச்சூழலை மேம்படுத்துகின்றன.

புறநகர் ரயில் லோகோ பைலட்டுகள் முனைய நிலையங்களிலும், பயணிகள் ரயில் லோகோ பைலட்டுகள் பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போதும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

ரயில்வே துறையின் இந்த தொடர்ச்சியான முயற்சிகள் லோகோ பைலட்டுகளின் பணிச் சுமையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க ஊக்கமளிக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com