இந்தியக் கடலில் தெரிந்த மர்மப் பச்சை விளக்குகள்! ஏலியன் நடமாட்டமா? நாசா வெளியிட்ட அதிரடி புகைப்படம்!

வெளிச்சம் விண்வெளியில் இருந்து பார்க்கும் அளவுக்கு மிகத் தீவிரமாக இருப்பதே அந்தப் பச்சை நிறப் புள்ளிகளுக்குக் காரணம்
indian ocean photos
Published on
Updated on
1 min read

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட இந்தியாவின் கடற்கரைப் பகுதியின் பிரமிக்க வைக்கும் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் கிறிஸ் வில்லியம்ஸ் பகிர்ந்துள்ளார். விண்வெளி நிலையம் இரவு நேரத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு மேலே பறந்தபோது, அரபிக்கடலின் இருண்ட பகுதியில் பிரகாசமான நியான்-பச்சை நிற விளக்குகள் கொத்தாகத் தெரிந்துள்ளன. இதைப் பார்த்தவுடன் இது ஏதோ கடலுக்கு அடியில் இருக்கும் விசித்திரமான உயிரினங்கள் அல்லது ஏலியன்களின் நடமாட்டமாக இருக்குமோ என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால் இவை அனைத்தும் மீன்பிடி படகுகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், பிளாங்க்டன் மற்றும் சிறிய மீன்களைக் கவர்ந்திழுக்கத் தங்களது படகுகளில் மிகவும் சக்திவாய்ந்த பச்சை நிற எல்இடி (LED) விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த விளக்குகளின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் சிறிய மீன்களை உண்பதற்காக ஸ்க்விட் (Squid) எனப்படும் கணவாய் மீன்கள் அங்கு வருகின்றன. இதைப் பயன்படுத்தி மீனவர்கள் எளிதாக மீன்களைப் பிடிக்கின்றனர். இந்த விளக்குகளின் வெளிச்சம் விண்வெளியில் இருந்து பார்க்கும் அளவுக்கு மிகத் தீவிரமாக இருப்பதே அந்தப் பச்சை நிறப் புள்ளிகளுக்குக் காரணம்.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிறிஸ் வில்லியம்ஸ், "இரவு நேரத்தில் விண்வெளி நிலையத்தின் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, கடற்கரைக்கு அருகே பச்சை நிற விளக்குகள் அவ்வப்போது தென்படும். இவை மீன்பிடி படகுகளில் இருந்து வரும் வெளிச்சம் தான். இந்தியாவின் மேற்குப் பகுதிக்கு மேலே நாங்கள் பறந்தபோது இந்தப் புகைப் படத்தை எடுத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, கடலின் அடர் கருப்பு நிறத்திற்கும், நகரங்களின் மஞ்சள் நிற ஒளிக்கும் இடையே இந்த மரகதப் பச்சை நிறப் புள்ளிகள் சிதறிக்கிடப்பது போலத் தெரிவதாக அவர் விளக்கியுள்ளார்.

கிறிஸ் வில்லியம்ஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசா விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகாலப் பயிற்சியை முடித்த அவர், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் 74-வது பயணக் குழுவில் (Expedition 74) ஒரு அங்கமாகப் பணியாற்றி வருகிறார். இந்தப் புகைப்படம் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருவர், "இது பூமியா? என்னால் நம்பவே முடியவில்லை, அற்புதமான காட்சி" என்று வியந்துள்ளார். மற்றொருவர், நட்சத்திரங்கள் எவ்வளவு தெளிவாகத் தெரிகின்றன என்று ஆச்சரியப்பட்டுள்ளார். இன்னும் சிலரோ இது எங்களது வீடு என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com