வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, NEET UG தேர்வு அடுத்த ஆண்டு முதல் கணினி வழித் தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
NEET UG 2026 தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால், தேர்வுக்குப் பின்னர் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்ற தகவல்கள் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கிடைத்தன. இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்புகளின் தொடக்கக்கட்ட விசாரணை மற்றும் சட்ட அமலாக்கத் துறையின் அறிக்கைகளின் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து, NEET மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக 2027 முதல் NEET UG தேர்வு CBT முறையில் நடத்தப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைபாடுகள் கண்டறியப்படும் இடங்களில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு OMR தாளை நிரப்புவதற்காக கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை முதலில் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) மேற்கொண்டது. பின்னர் வழக்கு மத்திய புலனாய்வுத் துறை (CBI) வசம் மாற்றப்பட்டது. தற்போது, NEET வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடையதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அடுத்தடுத்த ஆண்டுகளில் NEET தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுவதோடு கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் நடைபெறும் என கல்வி வட்டாரங்கள் கருதுகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.