புதிய வேலை... புது கனவு! பணியில் சேரும் முன்பே விபத்தில் பறிபோன இளைஞரின் உயிர்!

எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Indian student dies in US
Indian student dies in US
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவில் உயர்கல்வி படித்து, புதிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் பணியில் சேரத் தயாராக இருந்த இந்திய இளைஞர் ஒருவர், எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட இந்த விபத்தில், 25 வயதான சாய் தேஜா ஈரமல்லா என்பவர் உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு பகுதியைச் சேர்ந்தவர் சாய் தேஜா. இவர் ஈரமல்லா பிரசாத், ஸ்ரீகன்யா தம்பதியின் மூத்த மகன். கடந்த 2023ஆம் ஆண்டு உயர்கல்வி படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த அவர், நியூயார்க் மாநிலத்தின் யூட்டிகா பகுதியில் வசித்து வந்தார்.

படிப்பை முடித்த பிறகு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த சாய் தேஜாவுக்கு, சமீபத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விபத்து நிகழ்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அவருக்கு இந்த வேலை உறுதியானதாகக் கூறப்படுகிறது. விரைவில் பணியில் சேர வேண்டும் என்ற மகிழ்ச்சியிலும் எதிர்காலம் குறித்த கனவுகளுடனும் அவர் இருந்தார். ஆனால், வேலைக்குச் செல்வதற்கு முன்பே நிகழ்ந்த விபத்து அவரது வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.

கடந்த நவம்பர் 18ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நியூயார்க் மாநிலத்தில் உள்ள கனஜோஹாரி பகுதியில், இன்டர்ஸ்டேட் 90 நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிச் செல்லும் வழியில் மாலை 6.34 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

சாய் தேஜா ஓட்டிச் சென்ற கார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு மான் மீது மோதியுள்ளது. இந்த மோதலுக்குப் பிறகு கார் பழுதடைந்து, சாலையின் பயணப் பாதையிலேயே நின்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அதே திசையில் வேகமாக வந்த சரக்கு வேன், சாலையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது மோதியது. இந்த மோதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த மேலும் இரண்டு வாகனங்களும் விபத்தில் சிக்கின. இதனால் மொத்தம் நான்கு வாகனங்கள் இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில் பாதிக்கப்பட்டன.

இந்த விபத்தில் சாய் தேஜாவுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டு செயின்ட் மேரிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருடன் காரில் பயணம் செய்த மற்றொருவரும் பலத்த காயமடைந்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், ஹெலிகாப்டர் மூலம் அல்பானி மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விபத்தில் சிக்கிய சரக்கு வேனில் இருந்த பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சாய் தேஜாவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாகப் பழகி, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர் என்று உறவினர்கள் அவரை நினைவுகூர்ந்துள்ளனர். திரைப்படங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததாகவும், எதிர்காலத்தில் திரைப்பட இயக்குநராகவோ அல்லது திரைத்துறையில் ஏதாவது ஒரு பணியில் ஈடுபடவோ விரும்பியதாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

புதிய வேலை, எதிர்காலத் திட்டங்கள் என வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த இளைஞரின் கனவுகள் ஒரே விபத்தில் சிதைந்துள்ளன. அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள உறவினர்களும் நண்பர்களும் இணைந்து மேற்கொண்டனர். வெளிநாட்டில் உயர்கல்வி முடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் சென்ற இளைஞர் உயிரிழந்த செய்தி, அவரது சொந்த ஊரிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.