

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு ராகுல் காந்தி விடுத்த அழைப்பை தவிர்த்திருக்கிறார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட 7 முதல்வர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்பதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ராகுல்காந்தி தொடர்புகொள்ள முயன்ற போது அந்த அழைப்பை ஸ்டாலின் தவிர்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகளில் பிசியாக இருப்பதாக கூறி ராகுல் காந்தியுடன் பேச மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த இழுபறி நீடித்தபோது ராகுல்காந்தியை ஐந்து முறை ஸ்டாலின் தொடர்பு கொண்டு பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுகவுடன் காங்கிரஸ் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதுவரை கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஒரே நாள் இரவில் தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது.
ராகுல் காந்தியின் அழைப்பை தவிர்த்த மு.க.ஸ்டாலின், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டுக்கான வாழ்த்து செய்தி மட்டும் அனுப்பியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இரு தலைவர்களும் நெருக்கமாக இருந்த போதிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அவர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து எந்தவொரு கூட்டு பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. அதன் பிறகு தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உடனடியாக அதற்கு ஆதரவளித்து, அமைச்சரவையிலும் இடம்பெற்றது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-க்கு ஆதரவு அளிப்பதற்கு முன் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்று சொல்லப்பட்டது. அதே போல் கூட்டணியில் இணைத்த முதல் கட்சியாக காங்கிரஸே இருந்தது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையும் தவெக கூட்டணியுடனே எதிர்கொள்ள போவதாகவும் அறிவித்திருந்தது. இது தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த போக்கு 'துரோகம்' என்று பலரால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, திமுக MP கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் “முதுகில் குதித்தவர்கள்” என்றும் “எட்டப்பன்” என்று கடுமையாக சாடியிருந்தார்.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கடுமையான பகை நிலவி வருகிறது என்றே சொல்லலாம். “காங்கிரஸ் சவகாசமே வேண்டாம்" என்ற நிலையில் அடுத்தடுத்த வார்த்தை போர், விமர்சனம் என தொடர்ந்து விரிசல் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் இந்த அழைப்பு தவிர்ப்பு என்பது மீண்டும் விவாதமாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்