

மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாகப் பார்க்கப்பட்டு வந்த மம்தா பேனர்ஜியின் கோட்டை இன்று இடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ரெஜிநகர் தொகுதியில் மம்தா பேனர்ஜி நிறுத்தியிருந்த வேட்பாளர் விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், மறுநாளே போட்டியிட ஒப்புக்கொண்டார். நந்திகிராமிலோ வேட்பாளர் விலகியே விட்டார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக மம்தா அறிவித்துள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்தில்தான் காங்கிரஸ், மம்தாவுடன் தொகுதிப் பங்கீடு செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காங்கிரஸ் வேட்பாளரும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் சின்னம் மற்றும் பெயர் முடக்கப்பட்டுள்ள நிலையில், யாருடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவது என்பதே தெரியவில்லை என்கிறார் ரெஜிநகர் வேட்பாளர் ரபியுல் ஆலம் சவுத்ரி. இந்தியாவிலேயே வெற்றிகரமான மாநிலக் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸை, நாட்டிலேயே குழப்பம் மிகுந்த கட்சியாக உருவாக்கியிருக்கிறது.
பொதுவாக, எந்த ஒரு கட்சியும் தோல்விக்குப் பிறகு மீண்டு வந்துவிடும். ஆனால், ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்து திடீரென வீழ்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் உடைந்து நொறுங்குகிறது.
சட்டமன்றத்தில் முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்கள் மம்தாவின் அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தங்கள் சொந்த எதிர்க்கட்சித் தலைவரை நிறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள 28 எம்.பி.க்களில் 20 பேர் பாஜக முகாமில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், டிஎம்சி தலைவர்கள் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தீவிர வலதுசாரி இயக்கங்கள் பெரும் பலம் பெற்றுவிட்டன. மம்தாவின் பிராண்ட் வேல்யூ தலைகீழாகக் கவிழ்ந்துவிட்டது.
இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு சுழற்சியைக் காட்டுகிறது.
பிரமிளேஸ்வர் பானர்ஜி என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் மகளாக 1955ஆம் ஆண்டு பிறந்தவர் மம்தா பேனர்ஜி. தனது 17 வயதில் தந்தையை இழந்தது, அரசியலில் ஈடுபடும் சிந்தனையை விதைத்ததாக தனது சுயசரிதையில் கூறியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் எழுச்சி பெற்று வந்தனர். மம்தா தனது கல்லூரிக் காலத்திலேயே இடதுசாரிகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார். அவர் படித்த ஜோகமயா தேவி கல்லூரியில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சத்ரா பரிஷத் அமைப்பை நிறுவ உதவினார். காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், எமர்ஜென்சி காலத்துக்குப் பிறகு, பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தின் மூலம் புகழ்பெற்றார்.
மம்தா பேனர்ஜியின் தலைமைத்துவ பண்பு அனைவரையும் கவர்ந்தாலும் காங்கிரஸின் தேசிய தலைமைக்கும் அவருக்குமான உறவு எப்போதும் நெருடலானதாகவே இருந்துள்ளது.
காங்கிரஸ் கலாச்சாரம் மாநில தலைவர்களை பல இடங்களில் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே வைத்திருப்பதாக மம்தா குற்றம்சாட்டி வந்தார்.
1984 நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட ஜாதவ்பூர் தொகுதியில் CPI(M) தலைவர் சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்து தன்னை அரசியல் வரலாற்றில் நிலைநிறுத்தினார் மம்தா. அடுத்த 1989 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1993ம் ஆண்டு மேற்கு வங்க இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பேனர்ஜி (எம்.எல்.ஏவும் கூட), இடதுசாரி அரசு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி ஜூலை 21ம் தேதி, ரைட்டர்ஸ் பில்டிங் முற்றுகைப் போராட்டம் (Writers’ Building March) என்ற பேரணியை நடத்தினார். இந்த போராட்டத்தின் போது இடதுசாரி அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது மம்தாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக மாறியது.
இதற்கு இடையே, 1977ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த இடதுசாரிகள், ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதல் பலம் பொருந்தியவர்களாக வெற்றி பெற்றனர். காங்கிரஸின் தேசியத் தலைமை, இடதுசாரிகளை எதிர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை என மம்தா குற்றம்சாட்டி வந்தார்.
மாநில காங்கிரஸில் இடதுசாரிகளின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இடதுசாரிகளின் கருத்து கேட்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியில் இடதுசாரிகளுக்கு எதிரான தீவிர நிலைப்பாடு கொண்டவர்களுக்கு கட்சிப் பதவி மறுக்கப்பட்டதாகவும் கூறினார்.
சீதாராம் கேசரி முதல் சோனியா காந்தி வரை தலைவர்களிடம் சென்று பேசியும், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை எதிர்க்க காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறி, காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.
ஜனவரி 1, 1998-ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தொடர்ந்து, இடதுசாரிகளுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கொல்கத்தா தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் அரசில் மத்திய ரயில்வே அமைச்சராகச் செயல்பட்டார்.
அடுத்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் இந்தக் கூட்டணி தோற்கடிக்கப்பட்டது. அதற்குள் திரிணாமுல் காங்கிரஸ் வலிமையான மாநிலக் கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. மம்தா தன்னை பாஜகவில் இருந்து விலக்கிக்கொண்டார்.
2009ஆம் ஆண்டு சிங்கூர் மற்றும் நந்திகிராம் பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்க இடதுசாரி அரசு திட்டமிட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருந்தது. விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடதுசாரி அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. அப்போது களமிறங்கிய மம்தா, “மா, மாட்டி, மானுஷ்” (தாய், மண், மக்கள்) என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினார். உண்ணாவிரதமும் இருந்தார். அவரது போராட்டங்களின் வெற்றியாக, தொழிற்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட்டது மேற்கு வங்க அரசு.
அடுத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, இடதுசாரிகளுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டார் மம்தா. இறுதியில், 30 ஆண்டுகளுக்கும் மேலான இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவுகட்டி, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து சுப்ரதா முகர்ஜி, சோமன் மித்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். 2012ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் மம்தா.
மாநிலம் முழுவதும் இருந்த இடதுசாரிகளின் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன. தொழிற்சங்கங்கள் சூறையாடப்பட்டன. இப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும், திரிணாமுல் அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மோதல்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள், தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இடதுசாரிகளுக்கு வாக்களித்த கிராமங்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டன. இடதுசாரி ஆதரவாளர்களுக்கு அரசு திட்டங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டது. இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அடுத்த தேர்தலில் மம்தாவை எதிர்க்க காங்கிரஸும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்தன. அப்போது பாஜக தேசிய அரசியலில் கோலோச்சியிருந்ததால், காங்கிரஸ் பலவீனமடைந்திருந்தது. எளிதாகத் தேர்தலில் வென்று முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார் மம்தா.
ஆனால், 2019-ல் மாநிலத்தில் பாஜக 18 மக்களவைத் தொகுதிகளை வென்றபோது, திரிணாமுல் காங்கிரஸுக்கு பாஜகவால் இருக்கும் அச்சுறுத்தல் வெளிப்பட்டது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அரசியலால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அது இணக்கமற்ற, குழப்பமான கூட்டணியாகத்தான் அமைந்தது.
திரிணாமுல் கட்சியின் அமைப்பில் பல உள்ளூர் முகங்களை வளர்த்திருந்தார் மம்தா. அதாவது, கட்சியின் தலைமை மற்றும் சின்னத்தைக் கடந்து, மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் அதிக செல்வாக்குடன் இருப்பர். இவர்களால் மற்ற கட்சியினருடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ், இடதுசாரிகளுடன் வரலாற்றுப்பூர்வமாக மோசமான உறவைக் கொண்டிருந்ததால், களத்தில் இந்தக் கூட்டணியைச் செயல்பட வைப்பது மிகப் பெரிய சவாலாக அமைந்தது. மம்தாவும் இந்தியா கூட்டணி தன்னை முக்கிய பாஜக எதிர்ப்பு முகமாக முன்நிலைப்படுத்த வேண்டும் என விரும்பினார். முடிவில், பாஜக மற்றொரு வெற்றியைப் பெற்றது.
இப்போது அதிகாரத்தை இழந்துவிட்ட திரிணாமுல் சிதைந்துகொண்டிருக்கிறது. மம்தா பேனர்ஜி மற்றும் அவரது உறவினரான அபிஷேக் பேனர்ஜிக்கு எதிராகக் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இப்போது கட்சியையும் சின்னத்தையும் கூட இழந்துள்ளார். ராகுல் காந்தி அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளது அவருக்கு இருக்கும் பெரும் ஆறுதல். தனது கட்சியையும் இந்தியா கூட்டணியையும் தக்கவைக்கப் போராடி வருகிறார்.
தனது அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு நிலை வரும் என அவரேகூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தை நோக்கி ரோபோ சங்கர் கேட்பது போல, “ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி நீ?” என 10 கோடி வங்காள மக்களும் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸில் தொடங்கிய அவரது பயணம், மீண்டும் காங்கிரஸிலேயே தஞ்சம் அடையும் நிலையை வந்தடைந்து ஒரு முழு சூழற்சியைக் கண்டுள்ளது. 71 வயதானாலும் உச்சங்களையும் தோல்வியையும் சந்தித்தவராக தொடர்ந்து பாஜகவின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேசி வருகிறார் மம்தா. அவரது போராட்ட குணம் அவரை இங்கிருந்து எங்கே கொண்டு செல்லும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்