“நாடாளுமன்ற நுழைவாயில் மூடல்.. CJP கட்சியினர் மீது தடியடி” - மீறினால் துப்பாக்கி சூடு எனவும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற நுழைவாயிலில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தி தயார் நிலையில் உள்ளதால் பரபரப்பு..
CJP protest at Parliament entrance
Published on
Updated on
1 min read

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 12;30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு மற்றும் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு வாதிட்டு அமளியில் ஈடுப்பட்டனர்.

இதற்கிடையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையில் ஈடுபட உள்ளதாக வந்த செய்தியின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது ​​பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) 'சன்சத் சலோ' என்ற பேரணி நடைபெற்றதால், தேசிய தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தை நோக்கிச் சென்ற பேரணியை காவல்துறை தடுத்து நிறுத்த முயன்ற போது, ​​நாடாளுமன்ற வீதி அருகே போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதேவேளையில், NEET UG - 2026 தேர்வுத்தாள் கசிவு மற்றும் முறைகேடு ஆகியவற்றிக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. புது டெல்லி முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் 163வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், தில்லி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்ததுடன், நாடாளுமன்ற வளாகம் மற்றும் முக்கிய சந்திப்புகள் சுற்றி கூடுதல் காவலர்களை நிறுத்தியது. மேலும், போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை காவல்துறை நிராகரித்தபோதிலும், தாங்கள் இன்னும் முறையான பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக CJP தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட CJP கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியுள்ளனர் பாதுகாப்பு காவலர்கள். இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. பேரணியாக வந்த சிலர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளனர். எச்சரிக்கை மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற நுழைவாயிலில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தி தயார் நிலையில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com