மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, எண்ணெய் சந்தையும் சீர்குலைந்துள்ள காணப்பட்டு வருகிறது. இது பல்வேறு நாடுகளில் எதிரொலித்த வண்ணமே உள்ளது. தற்போது நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமில்லாமல் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், அவர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலமும், அத்தியாவசியமற்ற தங்கக் கொள்முதல்களைத் தவிர்ப்பதன் மூலமும், பெட்ரோல், டீசல் மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிக்க நாட்டிற்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.
"தேசபக்தி என்பது எல்லையில் ஒருவரின் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பது மட்டுமல்ல. இந்தக் காலகட்டத்தில், அது பொறுப்புடன் வாழ்வதும், நமது அன்றாட வாழ்வில் தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதுமாகும்," என்று பிரதமர் மோடி ஹைதராபாத்தில் கூறினார். சர்வதேச அளவில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்திய இஸ்ரேல் - அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் போரின் காரணமாக உலகளாவிய அளவில் பொருளாதாரச் சீர்குலைவுகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில் மக்களின் கூட்டுப் பங்கேற்பு அவசியம் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய மக்கள், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் கூறியுள்ளார். தேசிய நலன் கருதி, வீட்டிலிருந்து பணிபுரிதல் (WFH), இணையவழி மாநாடுகள் மற்றும் மெய்நிகர் கூட்டங்கள் உள்ளிட்ட கோவிட் கால செயல்திறன் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிப்பதற்காக, வெளிநாட்டுப் பயணங்களையும் வெளிநாட்டுத் திருமணங்களையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற தங்கக் கொள்முதல்களைத் தவிர்க்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், இது நாட்டின் பொருளாதார நலனுக்கும் தனிப்பட்ட நலனுக்கும் நன்மை பயக்கும் என்று வலியுறுத்தி, குடும்பங்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலணிகள், பைகள், அணிகலன்கள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் பிரதமர் மோடி மக்களை ஊக்குவித்தார். விவசாயிகள் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் குறைத்துக்கொள்ளவும், விவசாயத்தில் டீசல் பம்புகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் பாசனப் பம்புகளைப் பயன்படுத்தவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், மக்கள் உள்நாட்டுச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகத்திற்கு இன்றியமையாத ஹோர்முஸ் நீர்சந்தி தடுக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் காரணமாக எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் பிற இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் சீராக உயர்ந்து, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் குறைத்து வருகின்றன. தற்போது நீர்சந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து சுங்க வரி வசூலிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் நிலைமைகளை சமாளிக்க இந்திய பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.